Reading Time: < 1 minute

உலக அளவில் அதிக கொரோனா மரணங்கள் ஒப்பீட்டு ரீதியில் அதிக உடற்பருமன் கொண்டவர்கள் வாழும் நாடுகளிலேயே பதிவாகியுள்ளதாக உலக உடல் பருமன் கூட்டமைப்பு (World Obesity Federation) அதன் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

தொற்றுநோயின் முதல் ஆண்டில் கோவிட் -19 காரணமாக இறந்தவர்களில் 88 சதவிகிதம் போ் அதிக உடற்பருமன் கொண்ட நாடுகளில் வசிப்போர் என இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 50 வீதத்துக்கு மேலானோர் அதிக உடற்பருமன் கொண்டவர்களாக உள்ள பிரிட்டன், இத்தாலி மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அதிக கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

உலகம் முழுவதும் 25 இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தொற்று நோய் காரணமாக இறந்துள்ளனர். அவர்களில் 5 இலட்சத்து 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அமெரிக்காவில் மட்டும் இறந்துள்ளனர் எனவும் அந்த ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் மரணங்களுக்கு அதிக உடல் எடைக்கும் இடையிலே வலுவான பிணைப்பு உள்ளது.

அதிக உடல் எடை கொண்டவர்கள் 50 வீதத்துக்கு மேல் உள்ள நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஏனைய நாடுகளில் பதிவான கொரோனா மரணங்கள் பத்தில் ஒரு மடங்கு குறைவாக உள்ளதாகவும் அந்த ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், அதிக உடல் எடை கொண்டவர்கள் வசிக்கும் நாடுகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அதிகளவானோருக்கு மருத்துவமனை சிகிச்சை தேவைப்படுகிறது. அவர்களில் பெரும்பாலானோருக்கு செயற்கை சுவாச உதவி தேவைப்படுகிறது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரிட்டனில் அதிக எடை கொண்ட கொரோனா வைரஸ் நோயாளிகள் தீவிர சிகிச்சைக்குச் செல்லும் வீதம் சாதாரண உடல் எடை கொண்டவர்களை விட 3 மடங்கு அதிகரித்துள்ளதை பதிவுகள் காட்டுகின்றன.

இந்நிலையில் அதிக உடல் பருமன் உடையவர்கள் ஆபத்தான பிரிவினராகக் கருதப்பட்டு, அவர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மற்றும் தடுப்பூசி போடும் நடவடிக்கையில் அரசாங்கங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் உலக உடல் பருமன் கூட்டமைப்பு தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.