Reading Time: 2 minutes

கனடா – டொரோண்டோவில் நேற்று முன்தினம் (ஜூலை 28, 2019; ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற வரசித்தி விநாயகர் ஆலய (Sri Varasiththi Vinaayagar Hindu Temple Toronto) தேர்த்திருவிழாவில் பக்தர்களின் போர்வையில் திருடர்களும் கலந்துகொண்டு கூட்டநெரிச்சலில் தமது கைவரிசையை காட்டியுள்ளனர்.

நகை திருடிய சந்தேகத்தின் பெயரில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் இந்தியாவில் இருந்து கனடாவிற்கு சோதிடம் பார்க்க வந்த பெண் என்றும், திருவிழாவில் கலந்து கொண்ட பெண்களின் தாலிக்கொடிகளை திருடிய குற்றச்சாட்டில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டொரோண்டோவிலும் ஏனைய புலம் பெயர் நாடுகளிலும் இந்தியாவில் இருந்து சோதிடம் பார்ப்பதாக கூறி வருபவர்கள், சோதிடத்துடன் மட்டும் நின்றுவிடாமல், மக்களின் பயத்தை வைத்து பில்லி, சூனியம், வைத்தியம் என பல்லாயிரக்கணக்கான டொலர்களை பயத்தை ஏற்படுத்தி பூசை, சாந்தி, பேயோட்டல் , பிசாசு நிவர்த்தி என ஏமாற்றி பெற்றுக்கொள்கின்றனர். இந்த ஏமாற்றுக்கு இங்குள்ள சில தமிழ் வியாபாரநிலையங்களும் துணைபோகின்றன.

எனினும் திருடிய பெண்ணிடம் எந்த வித நகைகளும் கைப்பற்றப்படவில்லையென்றும், இது ஒரு கூட்டு களவு என்றும், திருடியவுடன் நகையை பக்கத்தில் இருந்தவரிடம் கைமாற்றிவிடுவதாகவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை டொரோண்டோ நகர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மைக்காலமாக டொரோண்டோ ஆலயங்களில் நகை திருட்டு அதிகரித்துவருவதாகவும், இது விடயத்தில் சகல ஆலயங்களும் பக்தர்களின் பாதுகாப்புக்கு கூடுதல் கவனம் எடுப்பது நல்லது என்றும் அண்மையில் டொரோண்டோ தமிழ் (TorontoTamil.com) செய்தி வெளியிட்டிருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Photo Credits: Nagamany Logendralingam (Canada Uthayan), Gana Arumugam (Ninaivukal Moment)