Reading Time: < 1 minute

கனடாவில் சுமார் 13 வருடங்களுக்கு முன்னால் காணாமல் போன திருமண மோதிரம் ஒன்று கரட்டில் இருந்து மீண்டும் கிடைத்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவில் அல்பெர்ட்டா பகுதியில் நார்மன் மற்றும் மேரி க்ராம்ஸ் என்ற தம்பதியர் வாழ்ந்து வந்துள்ளனர். அவர்களுக்கு 1951ல் திருமணம் இடம்பெற்றது. நார்மன் தோட்டக்கலையில் ஆர்வம் உள்ளவர் என்பதால் தனது வீட்டுக்கு பின்புறம் பெரிய காய்கறி தோட்டத்தையே உருவாக்கி வைத்திருந்தார்.

மேரியும் அவரோடு சேர்ந்து பணிபுரிவது வழக்கம். 2006 ஆம் ஆண்டளவில் மேரி தோட்டப் பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது தான் அணிந்திருந்த மோதிரம் காணாமல் போனமை பற்றி அறிந்தார். தோட்டத்திற்கு சென்று நீண்ட நேரம் தேடியும் மோதிரம் கிடைக்கவில்லை.

இது தெரிந்தால் தன் கணவர் வருத்தப்படுவார் என்பதால் அதேபோன்று வேறு ஒரு மோதிரத்தை அணிந்து கொண்டு சமாளித்தார். இது பற்றி தனது மகனிடம் கூட அவர் தெரியப்படுத்தவில்லை.

பல வருடங்கள் கழிந்த பின்னர் மகனுக்கு திருமணமாகிவிட்டதால் அந்த பூர்வீக வீட்டில் மகனை வசிக்கச் செய்துவிட்டு நார்மன் தம்பதியினர் வேறு ஊருக்கு சென்றுவிட்டனர்.

ஆனாலும் நார்மனின் மகன் அந்த தோட்டத்தை நல்லபடியாக பாதுகாத்து வந்துள்ளார். ஒருநாள் மேரியின் மருமகள் கொலீன் டாலி என்பவர் தோட்டத்தில் காய்கறிகளை பறித்து கொண்டிருக்கிறார்.

அப்போது பிடுங்கிய கரட் கிழக்குகளில் ஒன்று மட்டும் வித்தியாசமாக இருப்பதை கவனித்து அதை எடுத்து அவதானித்திருக்கிறார்.  அதில் ஒரு மோதிரம் சிக்கியிருந்தமை தெரியவந்தது.

உடனே அதை எடுத்து சென்று தனது கணவரிடம் காட்டியிருக்கிறார். அதை பார்த்த கொலீனின் கணவர் இது தனது தாய் மேரியினுடையது என்று கண்டுகொண்டார்.

மேரிக்கு இதுகுறித்து தெரிவித்த பிறகுதான் மோதிரம் காணாமல் போனதை மேரி வெளிப்படுத்தினார். தற்போது நார்மன் இறந்து 6 வருடங்களாகிவிட்டன.

கணவர் இல்லாவிட்டாலும் அவர் அணிவித்த மோதிரம் 13 வருடங்கள் கழித்து கிடைத்திருப்பது மேரிக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் தற்செயலான அதே நேரத்தில் அதிசயமானதாகவும் இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது.