Reading Time: < 1 minute

16 வயதுச் சிறுவன் ஒருவரை வேண்டுமென்றே வாகனத்தினால் மோதிக் கொலை செய்த சம்பவம் ஈஸ்ட் யோர்க் பகுதியில் திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

Woodbine Avenue மற்றும் O’Connor Drive பகுதியில் திங்கட்கிழமை பிற்பகல் இரண்டு மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில், இது குறித்து நேற்று பிற்பகலில் தகவல் வெளியிட்ட காவல்துறையினர், வாகனத்தால் மோதுண்ட சிறுவன் 16 வயதான மத்தியூ டேவெர் எனவும், வூட்பைன் அவனியூ பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் ஒன்றில் இருந்த இருவருக்கும் இந்தச் சிறுவன் மற்றும் அவருடன் சென்ற சிறுவனின் நண்பருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

மோதலைத் தொடர்ந்து இருவரும் அங்கிருந்து அகன்று சென்றுவிட்ட நிலையில், காரில் வந்த சந்தேக நபர்கள் இவர்கள் இருவரையும் Cedarvale Avenue மற்றும் Bracebridge Avenue பகுதியில் இடைமறித்ததாகவும், வாகனத்தில் இருந்து இறங்கிய ஒருவர் அவர்களைத் துரத்திய நிலையில், நண்பர்கள் இருவரும் அங்கிருந்த சமூக நிலையம் நோக்கி தப்பியோடிச் சென்றதாகவும், அப்போது வாகனத்தைச் செலுத்தி வந்த மற்றைய நபர், மத்தியூவை பின்னால் வந்து மோதியதாகவும் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து சந்தேக நபர்கள் இருவரும் அங்கிருந்து வாகனத்தில் வூட்பைன் அவனியூ நோக்கித் தப்பிச் சென்றுவிட்டதாகவும், தகவல் அறிந்து அதிகாரிகள் சம்பவ இடத்தினைச் சென்றடைந்த வேளையில் அங்கே குறித்த அந்தச் சிறுவன் பேச்சுமூச்சற்ற நிலையில் காணப்பட்டதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கே உயிரிழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இந்தச் சம்பவம் தொடர்பிலான ஒளிப்பதிவு ஆதாரமும் காவல்துறையினருக்குக் கிடைத்துள்ள நிலையில், வாகனம் வேண்டுமென்றே குறித்த அந்தச் சிறுவன் மீது மோதியமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.