Reading Time: < 1 minute

டூர்ஹாம் பிராந்தியத்தின் வடபகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Uxbridge பகுதியில் நேற்று முன்தினம் மாலை 6:30 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகவும், இந்த வெடிப்பின் போது குறித்த அந்த வீட்டின் யன்னல்கள் சிதறுண்டதாகவும், வெடிப்பு இடம்பெற்ற வேளையில் வீட்டினுள் அந்த வீட்டின் உரிமையாளரும் பாரமரிப்புப் பணியாளரும் இருந்ததாகவும் டூர்ஹாம் பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வீட்டின் வெப்பமாக்கி கருவி ஒன்றினை கடந்த வாரம் பொருத்தியிருந்த நிலையில், அதற்கான எரிவாயு வினியோகத்தினை திறந்து விட்ட பின்னர், புதிதாக பொருத்தப்பட்ட அந்தச் சாதனத்தை பாராமரிப்பு மற்றும் திருத்தவேலை ஊழியர் சரிபார்த்தபோது இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இந்த வெடிப்பின் போது படுகாயமடைந் இருவரும் உடனடியாக உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், பின்னர் உலங்குவானூர்தி மூலம் ரொரன்ரோ அவசர மருத்துவப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் ஒருவர் சுமார் 20 வயது மதிக்கத்தக்கவர் எனவும், மற்றையவர் சுமார் 50 வயது மதிக்கத்தக்கவர் எனவும், இருவருக்குமே பாரதூரமான காயங்கள் ஏற்பட்டிருந்ததாகவும், வெடிப்பு சம்பவித்த வீட்டுக்கும் கணிசமான அளவு கட்டுமான சேதாரங்கள் ஏற்பட்டிருந்ததாகவும் விசாரணை அதிகாரிகள் தகவல் வெளியிட்டு்ளளனர்.

இந்த வெடிப்புக்கான துல்லிய காரணம் இன்னமும் கண்டறியப்படவில்லை என்ற போதிலும், அது வீட்டின் வெப்பமூட்டிப் பொறிமுறையுடன் தொடர்புடையதாகவே தோன்றுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.