Reading Time: 2 minutes

இலங்கை முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் கனடா நாட்டுக்கான பிரதிநிதியாக கனடாவைச் சேர்ந்த முன்னாள் வர்த்தகர் ஆனந்தம் இரத்தினகுமார் (முன்னாள் டொராண்டோ SunSonic இணைய சேவை நிறுவன உரிமையாளர்) நியமிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் செயலகத்தில் நேற்று (15) புதன்கிழமை விசேட நியமனம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்த நியமனத்தை முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் எஸ். அமுனுகம இளம் வர்த்தகருக்கு வழங்கியுள்ளார்.

Kumar Anantham

இதனையடுத்து ஆனந்தம் இரத்தினகுமார் தனது நியமனத்தினூடாக தான் செயற்படுத்தவுள்ள திட்டங்கள் தொடர்பான ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

பொருளாதார ரீதியாக மிகவும் நலிவுற்று வீழ்ச்சியடைந்துள்ள எமது வடக்கு, கிழக்கு, மலையக மற்றும் ஏனைய மக்களின் தற்போதைய வாழ்க்கைத்தரத்தை உயர்த்த எனக்கு கிடைத்துள்ள இந்த அரிய வாய்ப்பை நான் சரியான முறையில் பயன்படுத்த எண்ணியுள்ளேன்.

கடந்த பல தசாப்தங்களாக பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள எமது மக்களது வாழ்வாதாரம் ஏன் பின்தங்கியது, இதனை மீண்டும் கட்டியெழுப்ப நாம் என்ன செய்யவேண்டும் என்பது தொடர்பாக ஒரு சிறந்த திட்டமிடல் இலக்கோடு, கூடவே இந்த முதலீட்டுப் பயணத்தை ஆரம்பித்துள்ளோம்.

கனேடிய தேசத்தில் நாம் பலதரப்பட்ட முதலீட்டு நிதி நிறுவனங்களை உருவாக்கி, அவற்றை வெற்றிகரமாக வழிநடத்தி வருவதோடு, ஒரு சிறந்த, பன்முகப்படுத்தப்பட்ட, ஆளுமையுள்ள அமைப்பாகவே இயக்கி வருகின்றோம் என்பதை இந்த இடத்திலே நான் குறிப்பிட விரும்புகிறேன்.

அந்த வகையில் முதலாவதாக, வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் ஏனைய இடங்களில் உள்ள வளங்களை மீண்டும் வலுப்பெறச் செய்யும் திட்டங்களை நாம் வகுத்துள்ளோம்.

இரண்டாவதாக, கிராமங்களில் உள்ள உற்பத்திகள்… உதாரணமாக, விவசாயம், மரக்கறி மற்றும் பழ வகைகளை உற்பத்தி செய்வது, அத்தோடு நன்னீர் மீன்பிடி, இறால் வளர்ப்பு போன்ற விடயங்கள் குறித்து ஆராய்ந்து, அவை தொடர்பாக மேலைத்தேய நடைமுறைகளுக்கு அமைய கருத்திட்டங்களை மாற்றீடு செய்து, உற்பத்தியை அதிகரித்து, அந்த உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதன் மூலம் கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்த எண்ணியுள்ளோம்.

வடக்கு, கிழக்கு மற்றும் ஏனைய இடங்களில் அமைந்துள்ள இயற்கை கடல் வளங்களை மேலும் மெருகூட்டி, நாட்டின் சுற்றுலாத்துறையை புதிய பரிணாமத்துக்கு கொண்டுசெல்லும்போது எமது மக்கள் மென்மேலும் பொருளாதார ரீதியான முன்னேற்றத்தை நோக்கிச் செல்வார்கள் என்பது எனது எண்ணம்.

அத்தோடு கடல்சார் தொழில் வளங்களை சரியான திட்டமிடலுடன் வலுவடையச் செய்து, கடற்றொழிலை தமது ஜீவனோபாயமாக கொண்டுள்ள மக்களது வாழ்வின் தொழில் தரத்தை உயர்த்துவது போன்ற திட்டங்களை புதிய முதலீடுகளின் ஊடாக மெருகூட்டி, அவற்றை சரியான முறையில் நடைமுறைப்படுத்தி, அவற்றுக்கு சர்வதேச சந்தைவாய்ப்பையும் பெற்றுக்கொடுக்கும் வண்ணமாகவே எமது திட்டங்கள் அமைந்துள்ளது.

அத்தோடு எமது வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் ஏனைய இடங்களிலும் உள்ள கைத்தொழில் முயற்சியாளர்களை இனங்கண்டு, பாரம்பரிய கைத்தொழில், சிறு கைத்தொழில் மற்றும் பன்முகப்பட்ட பெரியளவிலான கைத்தொழில் பேட்டைகளை உருவாக்கி, அவற்றினூடாக வீழ்ந்துபோன எமது மக்களது பொருளாதாரத்தை கட்டியெழுப்பி, இந்த போட்டிமிகு உலகிலே எமது மக்களும் எதிர்த்து நின்று பொருளாதாரத்தில் வலுப்பெற சகல திட்டங்களையும் நேர்த்தியாக வடிவமைத்து, சரியான திட்டமிடலுடன் நடைமுறைப்படுத்த எண்ணியுள்ளோம்.

இவ்வாறான கருத்திட்டங்களின் மூலம் பல புதிய இளம் முயற்சியாளர்கள் உருவாகுவதோடு, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக கடல் கடந்து செல்வோரின் எண்ணிக்கையில் கணிசமான மாற்றத்தையும் எம்மால் செய்யமுடியும் என நாம் நம்புகின்றோம்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் உலக நாடுகளில் உள்ள எமது சர்வதேச முதலீட்டாளர்களை எம்மோடு இணைத்து இந்த பணியை முன்னெடுக்க அன்போடு அழைக்கிறோம்.

இந்த சந்தர்ப்பத்தை தவறவிடாமல் எமது திட்டங்களில் முதலீடு செய்து பயனடையுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

எமது வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் ஏனைய மக்களின் பொருளாதாரத்தை மீண்டும் பலப்படுத்தி, எமது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சர்வதேச முதலீட்டாளர்கள் இச்சந்தர்ப்பத்தில் கைகொடுக்க வேண்டும் என நான் உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்.

எனவேதான் ‘எமது மக்களுக்காக, எமது மக்களிடமிருந்து’ என்றொரு விடயத்தை பற்றி நாம் சிந்தித்தோம்.

மாற்றம் ஒன்றே மாறாதது. நமது மக்களது உண்மையான பொருளாதார விடியலுக்காய் நாம் ஒன்றுசேர்ந்து பயணிப்போம். இந்தப் பணிகளில் சரியானதை சரியான விதமாக மக்களுக்கு கொண்டுசேர்க்கும் பிரதான பணியில் ஊடகத்துறை மிகச் சரியான பங்களிப்பை செய்துவருகிறது.

எமது இந்த முதலீட்டுப் பயணத்தையும் நாம் வெற்றிகரமாக முன்னெடுக்க உங்களின் ஆதரவை என்றும் எதிர்பார்த்திருக்கிறோம் என அவரது ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.