Reading Time: < 1 minute

உக்ரைனை ரஷ்யா ஊடுருவியதைத் தொடர்ந்து, புடினுக்கு நெருக்கமானவர்கள் மீது உலக நாடுகள் பல தடைகள் விதித்தன.

இந்நிலையில், புடினுடைய இரகசிய காதலி என அழைக்கப்படும் அலீனா (Alina Kabaeva) மீது தடைகள் விதிக்க அமெரிக்கா முதலான நாடுகள் கூட தயங்கின.

அப்படி அலீனா மீது தடைகள் விதித்தால், அது நேரடியாக புடினுடன் மோதுவது போலாகிவிடும், அவரது கோபத்துக்கு ஆளாகிவிடுவோம் என்று அஞ்சி அவர் மீது தடை விதிக்கத் தயங்கி நின்றன சில நாடுகள்.

கனடாவும் இதுவரை அலீனா மீது தடைகள் விதிக்காமலே இருந்து வந்தது.

ஆனால், தற்போது அலீனா மீது தடைகள் விதிப்பதாக கனடாவின் வெளிவிவகாரங்கள் துறை அமைச்சரான Mélanie Joly தெரிவித்துள்ளார்.

சில நேரங்களில் கனடாவும் அதன் கூட்டணி நாடுகளும் ஒரே நேரத்தில் தடைகள் விதிப்பதில்லை. ஆனாலும், அவர்களுடைய அணுகல் ஒருங்கிணைந்து செய்யப்படுவதுதான் என்ற Mélanie Joly, சில நேரங்களில் நாங்கள் முதல் அடி எடுத்துவைக்கிறோம், சில நேரங்களில் அமெரிக்கர்களுடன் சேர்ந்து செயலாற்றுகிறோம், சில நேரங்களில் ஐரோப்பியர்களுடன் சேர்ந்து செயலாற்றுகிறோம், கடைசியில் G7 அமைச்சர்கள் ஒன்றுகூடும்போதுதான் நாம் ஒரே நபர் தொடர்பில் செயல்படுகிறோம் என்பது தெரியவருகிறது என்றார்.