Reading Time: < 1 minute

கொரோனோ தொற்று நோய் நெருக்கடிக்கு மத்தியில் கனடா முழுவதும் பெருமளவான மக்கள் மன அழுத்தங்களுக்குள்ளாகி உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் இவ்வாறு மன அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ள மக்களுக்கு வழங்கப்படும் மின்தூண்டல் சிகிச்சை (electroconvulsive therapy) உள்ளிட்ட சிகிச்சைகளை வழங்க முடியாத நிலை மேலும் நிலைமையை மோசமாக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனால் தொற்றுநோய் நெருக்கடியால் மன அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளவர்களுக்கு உதவுவதற்காக சில புதிய சிகிச்சை முறைகளில் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தை விஞ்ஞானிகள் மத்தியில் தூண்டியுள்ளது.

நரம்பு மண்டலத்தை புத்துணர்ச்சிப்படுத்தி ஆரோக்கியம் பேணவும், நோயாளிகளின் மன அழுத்தத்தைக் குறைக்கவும் மின் தூண்டுதல் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

காது நரம்புகளில் சிறு அளவில் மின்சாரத்தை பாய்ச்சி நரம்பு மண்டலத்தை 55 விநாடிகளுக்கு மறுசமச்சீர் செய்யும் வகையில் இந்த மின்தூண்டல் சிகிச்சை அமைகிறது. இது நரம்பு மண்டலத்தை புத்துணர்ச்சிப்படுத்தி உள ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

இந்தச் சிகிச்சை மூலம் உடலின் மொத்த நரம்பு மண்டலத்திற்கும் மின் சமிக்ஞைகள் கடத்தப்படுகின்றன. இதனால் நரம்பு மண்டலம் புத்துணர்வு பெறுகிறது. மனநிலையில் தெளிவு ஏற்படுவதுடன், நல்ல உறக்கமும் வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் கொரோனா தொற்று நோயாளர்களால் மருத்துவமனைகள் நிரம்பி அழுத்தத்துக்குள்ளாகியுள்ளதால் இவ்வாறான சிகிச்சைகளை வழங்க முடியாதுள்ளதாக உளநல சிகிச்சை நிபுணர் டாக்டர் டேனியல் பிளம்பர்கர் தெரிவித்துள்ளார்.

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு மின் தூண்டல் சிகிச்சை அளிக்கும்போது அவா்களுக்கு ஒக்ஸிஜன் கொடுக்கவேண்டியுள்ளது. எனினும் இவற்றுக்கான வாய்ப்புக்கள் இப்போது குறைவாகவே உள்ளன என அவர் கூறினார்.

இவ்வாறான சிகிச்சை வழங்கும்போது ஒரு மனநல மருத்துவர், ஒரு மயக்க மருந்து நிபுணர் மற்றும் பிற உதவியாளர்கள் உடன் இருக்க வேண்டும். ஆனால் இப்போது வைத்தியசாலைகளில் அனைவருமே முழுமையாக தனிப்பட்ட பாதுகாப்பு அங்கிகளுடன்(PPE) கடமையாற்ற நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். அத்துடன், நோயாளிகளுக்கு தொற்று நோய் குறித்த அச்சமும் உள்ளது.

சம்பந்தப்பட்ட அனைவருக்கும் வைரஸ் அபாயங்களைக் குறைப்பதற்காக இப்போது இவ்வாறான சிகிச்சை முறைகளை மருத்துவர்துகள் வெகுவாகக் குறைத்துள்ளனர்.

இந்நிலையில் மன அழுத்தங்களால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு புதிய சிகிச்சை முறைகள் குறித்து நாங்கள் கவனம் செலுத்தவேண்டியுள்ளது என டாக்டர் டேனியல் பிளம்பர்கர் கூறினார்.

தொற்றுநோயின் விளைவாக மன அழுத்த சிக்கல்களும் மோசமடைந்து கொண்டிருந்தபோது, பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் இடமளிப்பது கடினமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போதைய சூழ்நிலையில் அவசர நோயாளிகளைத் தவிர ஏனையவர்களை சிகிச்சைகளுக்கு ஏற்றுக்கொள்ள மருத்துவமனைகள் தயங்குகின்றன. அதற்கு நியாயமான காரணமும் உள்ளது எனவும் டாக்டர் பிளம்பர்கர் சுட்டிக்காட்டுகிறார்.