Reading Time: < 1 minute

சமூக மற்றும் பொருளாதார துறைசார்ந்தோருக்கு கட்டாய தடுப்பூசி திட்டத்தை அமுல்படுத்த கனடா – பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

செப்டம்பர் 13 முதல் உணவகங்கள், திரையரங்குள் மற்றும் உள்ளக உடற்பயிற்சிக் கூடங்கள் உள்ளிட்ட அத்தியவசியமற்ற துறைகளில் பணியாற்றுவோர் மற்றும் பயன்படுத்துவோர் கொவிட் 19 தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயம் என மாகாண அரசாங்கம் நேற்று அறிவித்தது.

விளையாட்டு நிகழ்வுகள், இசை நிகழ்ச்சிகள், திருமணங்கள் மற்றும் பிற தனியார் மற்றும் பொது உட்புற சமூக நிகழ்வுகளில் பங்கேற்க தடுப்பூசி போட்டிருப்பது கட்டயமாக்கப்படுகிறது.

கனடாவின் மேற்குத் திசையில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவில் நாட்டிலேயே மிக அதிகளவு தொற்று நோயாளர்கள் அண்மைக் காலங்களில் பதிவு செய்யப்பட்டு வருகின்றனர். அண்மைய நாட்களில் அங்கு தினசரி 600-க்கு மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுவருகிறது.

நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் பணியாற்றுவோருக்கு காட்டாய தடுப்பூசித் திட்டம் அங்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.

உணவகங்கள், திரையரங்குள் மற்றும் உள்ளக உடற்பயிற்சிக் கூடங்கள் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற சேவைகளை பயன்படுத்துவோர் குறைந்தது ஒரு தடுப்பூசியையேனும் பெற்றிருக்க வேண்டும் என்ற கட்டாய நடைமுறை செப்டம்பர் 13 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. ஒக்டோபர் 24 -க்குப் பின்னர் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றவர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என பிரிட்டிஷ் கொலம்பியா முதல்வர் ஜான் ஹோர்கன் அறிவித்துள்ளார்.

சமூக மற்றும் பொருளாதார துறைசார்ந்தோர் தங்கள் செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முன்னர் பாதுகாப்பான, பயனுள்ள தடுப்பூசியைப் பெறாமல் தவிர்க்க எந்த காரணமும் இல்லை என நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஜான் ஹோர்கன் என்று ஹோர்கன் குறிப்பிட்டார்.

அத்தியாவசியமற்ற வணிகத் துறை சார்ந்தோருக்கு தடுப்பூசியைக் கட்டாயமாக்கிய முதல் மாகாணமாக கியூபெக் உள்ளது. ஆகஸ்ட் 15 முதல் இந்தக் கட்டாய நடைமுறை அமுல் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, கனடா கூட்டாட்சி அரச பணியாளர்களுக்கு கட்டாய தடுப்பூசித் திட்டத்தை மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. எனினும் இதனை எதிர்க்கட்சிகள் எதிர்த்துள்ளதுடன், தோ்தலில் முக்கிய எதிர்ப்புப் பிரச்சாரமாக இதனைக் கையில் எடுத்துள்ளனர்.

இது போன்ற கட்டளைகள் தனிமனித சுதந்திரத்திற்கு இடையூறாக இருக்கும் என பிரததான எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் விமர்சித்துள்ளது.

கனடா முழுவதும் தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட 73 வீதமானவர்கள் முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அரசாங்க தரவுகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, மத்திய அரசின் கட்டாய தடுப்பூசிக் கொள்கையை 74 வீதமாக கனேடியர்கள் ஆதரிப்பதாக நனோஸ் அண்மையில் நடத்திய கருத்துக் கணிப்பு தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.