Reading Time: < 1 minute

கனடா, ஜேர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கொவிட் 19 தொற்று வீதங்கள் அதரிகரித்து வருவதை அடுத்து இந்நாடுகளுக்காக தனது பயண ஆலோசனை நிலைகளை அமெரிக்கா உயர்த்தியுள்ளது.

கனடா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளுக்கான ஆலோசானை 3-ஆம் நிலைக்கு நகர்த்தப்பட்டுள்ளது. சாத்தியமான கொவிட் அபாயம் காரணமாக இந்நாடுகளுக்கான பயணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு அமெரிக்கர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

2020 – மார்ச் முதல் மூடியிருந்த அமெரிக்காவுடனான எல்லையை கனடா திறந்து மூன்று வாரங்களுக்குப் பின்னர் கனடாவுக்கான பயண ஆலோசனை எச்சரிக்கையை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.

அத்துடன், சுவிட்சர்லாந்துக்கான அதன் ஆலோசனையை 4-ஆம் நிலைக்கு அமெரிக்கா உயர்த்தியது. இது மிக உயர்ந்த மட்ட ஆலோசனையாக உள்ளது. அத்துடன். இதன் மூலம் கொவிட் வேகமாகப் பரவுவதால் சுவிட்சர்லாந்துக்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு அமெரிக்கர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, அமெரிக்காவில் தொற்று நோய் பரவல் அதிகரித்துள்ள நிலையில் அமெரிக்கர்களுக்கான கட்டுப்பாடுகளை அதிகரிக்குமாறு அனைத்து ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளும் நேற்று பரிந்துரைத்துள்ளன.

ஜேர்மனியில் கடந்த 7 நாட்களில் தினசரி சராசரியாக 9,167 புதிய தொற்று நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கனடா தினசரி 3,039 மற்றும் சுவிட்சர்லாந்து தினசரி 2,572 தொற்று நோயாளர்களை பதிவு செய்துள்ளன.

மக்கள்தொகைக்கு ஏற்றவாறு, சுவிட்சர்லாந்தில் கடந்த வாரத்தில் ஒரு நாளைக்கு 100,000 பேருக்கு சராசரியாக 30 பேர் என்ற அடிப்படையில் புதிய தொற்று நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். ஜோ்மனி 100,000க்கு 11 பேர் என்ற அடிப்படையிலும் கனடா 100,000-க்கு 08 பேர் என்ற அடிப்படையிலும் புதிய தொற்று நோயாளர்களை பதிவு செய்துள்ளது.

அதேவேளை, அமெரிக்காவில் கடந்த 7 நாட்களில் தினசரி சராசரியாக 154,350 புதிய தொற்றுநோாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டனர். இதன்படி தினசரி 100,000 பேருக்கு 47 பேர் என்ற அடிப்படையில் அமெரிக்காவில் தொற்று நோயாளர்கள் பதிவாகி வருகின்றனர். இது கனடா, ஜேர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுடுன் ஒப்பிடுகையில் பல மடங்கு அதிகமாக உள்ளது.

இதேவேளை, எஸ்டோனியா, வடக்கு மாசிடோனியா, அஜர்பைஜான் மற்றும் சென்.லூசியா ஆகிய நாடுகளுக்காக பயண ஆலோசனைகளையும் அமெரிக்கா மிக உயர்ந்த மட்டமான 4-ஆம் நிலைக்கு உயர்த்தியுள்ளது. இந்த மாத ஆரம்பத்தில் பிரான்ஸ், இஸ்ரேல், தாய்லாந்து மற்றும் ஐஸ்லாந்து ஆகியன நாடுகள் 4 -ஆம் நிலை எச்சரிக்கைப் பட்டியலில் சேர்க்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.