Reading Time: < 1 minute

கனடாவில் தங்கி வெளிநாடுகளை சேர்ந்த மாணவர்கள் கல்வி பயில அந்த நாட்டு அரசாங்கம் விசாக்களை வழங்கி வருகிறது.

இந்த சூழலில் கடந்த சில ஆண்டுகளாக கனடாவுக்கு வரும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை அதிகளவு அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக நிரந்தர குடியுரிமை இல்லாதவர்களுக்கு தங்குவதற்கு இடம் கிடைக்காமல் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனை சமாளிக்க வெளிநாட்டு மாணவர்களின் வருகைக்கு கட்டுப்பாடு விதிக்க முடிவு செய்யப்பட்டது.

இதன்படி எதிர்வரும் 2 ஆண்டுகளுக்கு வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் விசாக்களின் எண்ணிக்கை குறைக்கப்படுவதாக கனடா அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் கனடாவின் குடிவரவுத்துறை மந்திரி மார்க் மில்லர் தெரிவிக்கையில்,

“கனடாவில் தற்காலிக வசிப்பிடத்தை நிலையாக பராமரிக்கவும், 2024-ம் ஆண்டுக்கான சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையில் மேலும் வளர்ச்சி இல்லை என்பதை உறுதிப்படுத்தவும் நாங்கள் அடுத்த 2 ஆண்டுகளுக்கு கல்வி விசாவில் உச்சவரம்பை அமைக்கிறோம்.

இதன்படி நடப்பு ஆண்டில் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் விசாக்களில் 35 சதவீதம் குறைக்கப்படும்.

இந்நிலையில், இந்த ஆண்டு 3,60,000 மாணவர்களுக்கு மட்டுமே விசா வழங்கப்படும். 2025-ம் ஆண்டு வழங்கப்படும் விசாக்களின் எண்ணிக்கை தொடர்பில் இந்த ஆண்டு இறுதியில் முடிவு எடுக்கப்படும் என்று மார்க் மில்லர் கூறினார்.