Reading Time: < 1 minute

கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியில், ஓடும் ரயிலிலிருந்து குதித்தார்கள் நான்குபேர்.

கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைவோரை கட்டுப்படுத்த அரசாங்கங்கள் எத்தனை நடவடிக்கைகள் எடுத்தாலும், அதையும் மீறி அமெரிக்காவுக்குள் நுழைய புதுப் புது வழிமுறைகளைக் கண்டுபிடித்தவண்ணம் உள்ளார்கள் சட்ட விரோத புலம்பெயர்வோர்.

அவ்வகையில், இரு நாடுகளுக்குமிடையில் பயணிக்கும் சரக்கு ரயில் ஒன்றிலிருந்து அமெரிக்க எல்லைக்குள் குதித்துள்ளார்கள் நான்கு பேர்.

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்திலுள்ள Buffalo என்னும் நகரம், கனடா எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. அந்த வழியாக, இரு நாடுகளுக்குமிடையில் சர்வதேச இருப்புப்பாதை ஒன்று செல்கிறது.

நேற்று அந்த வழியாகச் சென்றுகொண்டிருந்த சரக்கு ரயில் ஒன்றிலிருந்து, ஒரு பெண்ணும் மூன்று ஆண்களும், அமெரிக்க எல்லைக்குள் குதித்திருக்கிறார்கள்.

அமெரிக்க எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் வருவதைக் கண்டதும் அந்த மூன்று ஆண்களும் அந்தப் பெண்ணை விட்டு விட்டு ஓட்டம் பிடித்துள்ளார்கள். ரயிலிலிருந்து குதித்ததில் அந்தப் பெண்ணுக்கு அடிபட்டதால் அவரால் ஓட இயலவில்லை.

அந்தப் பெண்ணை மீட்ட பொலிசார், சிகிச்சைக்காக அவரை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளார்கள். ஓட்டம் பிடித்த மூன்று ஆண்களையும் துரத்திப்பிடித்த பொலிசார், அவர்களையும் கைது செய்துள்ளார்கள்.

அந்தப் பெண்ணும், கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு ஆண்களும் இந்தியர்கள் என தெரியவந்துள்ளது. மூன்றாவது ஆண், டொமினிக்கன் குடியரசைச் சேர்ந்தவர் ஆவார்.

கைது செய்யப்பட்டவர்களை நாடுகடத்துவதற்கான பரிசீலனை நடைபெற்றுவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.