கனடாவின் ஒன்ராறியோவில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய தம்பதியருக்கு பிராம்ப்டனில் அஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய தம்பதியரின் மகன், தன் பெற்றோரின் கொலையைத் தடுத்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.
ஒன்ராறியோவில் தங்கிப் படிக்கும் தங்கள் பிள்ளைகளைப் பார்ப்பதற்காக ஜக்தார் சிங் (Jagtar Singh, 57) மற்றும் அவரது மனைவியான ஹர்பஜன் கௌர் (Harbhajan Kaur, 55) ஆகிய இருவரும் இந்தியாவிலிருந்து கனடா வந்திருந்தார்கள்.
நவம்பர் மாதம் 20ஆம் திகதி, நள்ளிரவில் வாகனம் ஒன்றில் வந்த சிலர், திடீரென அந்தக் குடும்பத்தினர் தங்கியிருந்த வீட்டின் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார்கள்.
தகவலறிந்து பொலிசார் வந்தபோது, சிங் ஏற்கனவே உயிரிழந்துவிட்டிருந்தார். அவரது மனைவியையும், வீட்டில் அவர்களுடன் இருந்த அவர்களுடைய மகளையும் பொலிசார் மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர்.
பல அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையிலும், கௌர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். அவரது மகள் இன்னமும் மருத்துவமனையில்தான் இருக்கிறார்.
தம்பதியருக்கு, கடந்த வார இறுதியில் பிராம்ப்டனில் அஞ்சலி நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய தம்பதியரின் மகனான குர்தீத் சிங் (Gurdit Singh Sidhu), தன் பெற்றோர் கொல்லப்படுவதை தவிர்த்திருக்கமுடியும் என தான் நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.
அதாவது, ஜக்தார் சிங்கும் அவரது மனைவியான ஹர்பஜன் கௌரும் சுடப்படுவதற்கு முன், பீல் பகுதி பொலிசார் வந்து அவர்களை சந்தித்துள்ளார்கள். ஆகவே, அவர்களுக்கு ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போகிறது என்பது முன்கூட்டியே தெரிந்திருக்கக்கூடும் என்கிறார் குர்தீத் சிங்.
ஆகவே, தன் பெற்றோர் கொல்லப்படுவதை தவிர்த்திருக்கமுடியும் என தான் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், தம்பதியர் கொலை தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. ஆனாலும், தம்பதியர் கொலையில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களைத் தாங்கள் தேடுவதாக பொலிசார் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.