Reading Time: < 1 minute

தற்கொலை செய்துகொள்ளப்போகிறவர்கள் தற்கொலை செய்துகொள்ளப்போகிறேன் என உங்களிடம் நேரடியாகச் சொல்வதில்லை

  • இந்த அறையில் எனக்கு மூச்சுத்திணறுகிறது என்று சொல்கிறார்கள்
  • கண்ணுக்குத் தெரியாத இரும்புக்கரம் ஒன்று இதயத்தைப் பிசைகிறது என்று சொல்கிறார்கள்
  • மறக்க வேண்டியதை மறக்க முடியவில்லை என்று சொல்கிறார்கள்
  • அவமானங்கள் முன் மிகவும் கூச்சமாக இருக்கிறது என்று சொல்கிறார்கள்
  • எனக்குப் பசிக்கவேயில்லை என்று சொல்கிறார்கள்
  • யாரையும் காணப்பிடிக்கவில்லை என்று சொல்கிறார்கள்
  • யாருமில்லாத அறையில் குரல்கள் கேட்கின்றன என்று சொல்கிறார்கள்
  • எனக்கு அன்பு கிடைக்கவில்லை என்று சொல்கிறார்கள்
  • மிகவும் வலிக்கிறது என்று சொல்கிறார்கள்
  • இருட்டில் உட்கார்ந்திருப்பது ஆறுதலாக இருக்கிறது என்று சொல்கிறார்கள்
  • கண்ணுக்கு எந்தப் பாதையும் புலப்படவில்லை என்று சொல்கிறார்கள்
  • எங்காவது போய்விடவேண்டும் என்று சொல்கிறார்கள்
  • எனக்கு நியாயம் கிடைக்கவில்லை என்று சொல்கிறார்கள்
  • படம் பார்க்கும்போது கதை புரியவில்லை என்று சொல்கிறார்கள்
  • நீண்ட நேரம் குளித்துக்கொண்டே இருக்கவேண்டும் போலிருக்கிறது என்று சொல்கிறார்கள்
  • கடவுள் என்று யாரும் இல்லை என்று சொல்கிறார்கள்

தற்கொலை செய்துகொண்டவர்கள் உங்களிடம் ஒன்றுமே சொல்லவில்லை என்று சாதிக்காதீர்கள்

கடைசியாக உங்கள் கைகளைப் பிடித்துக்கொண்டு அவர்கள் ஏதோ சொல்லவந்தபோது நீங்கள் வேறு அவசர வேலையில் இருந்தீர்கள் அல்லது அவர்கள் சொல்லவந்தது அதுதான் என்பதைக் கவனிக்கத் தவறினீர்கள்

தற்கொலை செய்துகொள்ளபோகிறேன் என வெளிப்படையாகச் சொல்லும் யாரும் அவ்வளவு சீக்கிரம் தற்கொலை செய்துகொள்வதில்லை, அவர்கள் உண்மையில் உங்களோடு ஒரு சமாதான பேச்சுவார்த்தைக்கு வருகிறார்கள்

தற்கொலை செய்துகொண்டவர்கள் உங்களிடம் ஒன்றுமே சொல்லவில்லை என்று சாதிக்காதீர்கள்