Reading Time: < 1 minute

சிறுவர்களின் ஆபாசப் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கனடா – ஒன்ராறியோ மாகாணம், Whitby நகரில் வசிக்கும் கார்த்திக் மணிமாறன் என்ற 33 வயதான தமிழர் ஒருவரைக் கைது செய்து அவருக்கு எதிராக டர்ஹாம் பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

டர்ஹாம் பகுதியைச் சோ்ந்த சந்தேகநபர் சமூக ஊடகங்களில் சிறுவர்களின் ஆபாசப் படங்களை பதிவேற்றியதாக கடந்த ஒக்டோபர் மாத சிறுவர் பாதுகாப்பு மையத்திலிருந்து தகவல் கிடைத்ததை அடுத்து இது குறித்த விசாரணையைத் தொடங்கியதாக டர்ஹாம் பொலிஸார் தெரிவித்தனர்.

டர்ஹாமின் சிறுவர் துஷ்பிரயோக தடுப்பு பிரிவினர் 33 வயதான சந்தேக நபரை அடையாளம் கண்டு அவரிடம் இருந்த மின்னணு சாதனங்களை பறிமுதல் செய்தனர். அத்துடன், அந்த சாதனங்கள் மின்னணு பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டன.

இந்நிலையில் இவ்வாறு பாதிக்கப்பட்ட சிறுவர்கள் எத்தனை பேர்? என்பது குறித்த தகவல்களை திரட்டி வருவதாக நேற்று திங்கட்கிழமை ஊடகங்களிடம் தெரிவித்துள்ள டர்ஹாம் பொலிஸார், இது குறித்து மேலதிக தகவல்களை வெளியிட முடியாது எனவும் கூறியுள்ளனர்.

விட்பியைச் சேர்ந்த 33 வயதான கார்த்திக் மணிமாறன் மீது சிறுவர் ஆபாச புகைப்படங்களை வைத்திருந்தமை, அவற்றை பகிர்ந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

ஸ்னாப்சாட், ரிக்ரொக், ஒமேகிள், லைக்கி மற்றும் கிக் மெசஞ்சர் உள்ளிட்ட பல சமூக வலைத்தளங்களில் சந்தேக நபர் 2020-ஆம் ஆண்டு முழுவதும் செயற்பட்டதாக புலனாய்வாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பல்வேறு பெயர்களின் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி இந்த நபர் சிறுவர் ஆபாசப் படங்களைப் பகிர்ந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர் தொடர்பான மேலதிக தகவல்கள் தெரிந்த எவரும் 905-579-1520 என்ற பொலிஸாரின் தொலைபேசி எண்ணுக்கோ, அல்லது குற்றத் தடுப்பு பிரிவினரின் 1-800-222-8477 என்ற எண்ணுக்கோ தொடர்புகொண்டு தகவல்களை வழங்குமாறும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.