Reading Time: < 1 minute

காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட பாடகி சுசித்ரா, நான்கு நாட்களுக்கு பிறகு சென்னை காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளார்.

பிரபல நடிகர், நடிகைகளின் சர்ச்சைக்குரிய அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு கோலிவுட் திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியவர் பாடகி சுசித்ரா.தன் ஆரம்பகால வாழ்க்கையை ரேடியோ மிர்ச்சி எஃப்எம்மில் தொடங்கியவர் பாடகி சுசித்ரா. தனது வசீகர குரலால் ரசிகர்களின் மனதை கவர்ந்த அவர், தொடர்ந்து லேசா லேசா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பின்னணி பாடகியாக தன் பயணத்தை தொடங்கினார்.

ஜே ஜே திரைப்படத்தில் இடம்பெற்ற ‘மே மாதம் 98ல் மேஜர் ஆனேனே’ என்ற பாடலை பாடி ரசிகர்களை கிறங்கடித்தார். காக்க காக்க திரைப்படத்தில் இடம் பெற்ற உயிரின் உயிரே என்ற பாடல் பாடியதன் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார். தொடர்ந்து வல்லவன், போக்கிரி போன்ற திரைப்படங்களில் ஹிட் பாடல்களை பாடி முன்னணி பாடகியாக வலம் வந்தார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு படங்களில் பாட சுசித்ராவிற்கு வாய்ப்புகள் குவிய தொடங்கியது. பின்னணி பாடகியாக திரையுலகில் சிறப்பாக வலம் வந்த அவர், பல்வேறு படங்களில் நடித்த நடிகர் கார்த்திக்கை திருமணம் செய்து கொண்டார். திருமண வாழ்வும் சிறப்பாக சென்ற நிலையில், 2017ம் ஆண்டு அவரது வாழ்வில் பல அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் அரங்கேறின.

2017ம் ஆண்டு மார்ச் மாதம், சுசி லீக்ஸ் என்ற பெயரில் பல்வேறு கோலிவுட் பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்களை, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு தமிழ் திரையுலகில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தினார் சுசித்ரா. இது தொடர்பாக அவரது கணவர் கார்த்திக், இது ஹேக்கர்களின் வேலை என குறிப்பிட்டு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

எனினும், சிறிது காலத்தில் நடிகர் கார்த்திக் விவகாரத்து பெற்றதால், சுசித்ரா தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இதற்கிடையே மன குழப்பத்தில் தவித்து வந்த சுசித்ரா, காணவில்லை என கடந்த 11ம் தேதி சுசித்ராவின் சகோதரி சென்னை அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய காவல்துறையினர், சென்னை நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த சுசித்ராவை மீட்டனர்.

அப்போது, தம்மை மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் நடத்துவதால், தனது குடும்பத்தை விட்டு விலகி வந்ததாக போலீசாரிடம் சுசித்ரா தெரிவித்துள்ளார். இதனால் சுசித்ராவை மீட்ட காவல்துறையினர், சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.