Reading Time: 2 minutes

லைக்கா புரொடக்ஷன் நிறுவனத் தலைவர் திரு. அல்லிராஜா சுபாஸ்கரனின் வாழ்க்கை வரலாற்றினை திரைப்படமாக எடுக்க பிரபல இயக்குனர்கள் இருவர் விருப்பம் வெளியிட்டுள்ளனர்.

லைக்கா புரொடக்ஷன் மற்றும் லைகா மொபைல்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களின் நிறுவனராக லைக்கா குழுமத்தின் தலைவர் திரு. அல்லிராஜா சுபாஸ்கரன் விளங்குகிறார்.

இந்தநிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை – 06.12.19) சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ்கோரமெண்டல் சொகுசு விடுதியில் சுபாஸ்கரன் தலைமையில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வின்போது மலேசியாவில் இயங்கிவரும் மலேசிய தமிழ் மன்றம் லைக்கா குழுமத்தின் தலைவர் சுபாஸ்கரன் அல்லிராஜா அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்தது.

அத்துடன் கர்நாடகாவிலுள்ள பொங்குதமிழ் மன்றம் சார்பாகவும் வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

இதன்போது நிகழ்வில் கலந்து கொண்ட பிரபல இயக்குனர் மணிரத்னம் அல்லிராஜா சுபாஸ்கரனின் வாழ்க்கை வரலாற்றை தான் படமாக்க ஆசைப்படுவதாக தெரிவித்தார்.

அந்த அளவிற்கு அவர் வாழ்கையில் பல இன்னல்களைக் கடந்து இன்று மிக பெரிய தொழிலதிபராகவும் தயாரிப்பாளராகவும் வளர்ந்துள்ளார் என புகழாரம் சூட்டினார்.

இதே விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது கத்தி படத்தின் போது ஏற்பட்ட சிக்கல்களையும் அல்லிராஜா சுபாஸ்கரன் பற்றிய தகவல்களையும் பகிர்ந்து கொண்டார்.

“அல்லிராஜா சுபாஸ்கரன் பல பிரச்சினைகளுக்கு இடையே பல தடைகளைத் தாண்டி லண்டன் சென்று இன்று தனி ஒரு நபராக மிக பெரிய தொழிலதிபராக வளர்ந்திருக்கிறார்.

நம்மை ஒரு காலத்தில் ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள் இன்று லண்டனில் அல்லிராஜா சுபாஸ்கரன் எனும் தமிழனுக்கு கீழ் பணியாற்றுவது மிகவும் பெருமையாக இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

இறுதியில் தான் அல்லிராஜா சுபாஸ்கரனின் வாழ்கையை கண்டிப்பாக படமாக்க ஆசை படுவதாகவும் கூறியிருந்தார்.

இதன்போது அங்கிருந்த ஊடகவியலாளர்கள் உரத்த குரல்களில் “முருகதாஸ் சேர் இதையே தான் சற்று நேரத்திற்கு முன் மணிரத்னம் கூறினார்” எனத் தெரிவித்தனர்.

“முருகதாஸ் சிரித்த கொண்டே ஓ மணி சேர் சொல்லிடாரா பராவால்ல அவர் பகுதி 1 ஐ பண்ணட்டும் நான் பகுதி 2 ஐ பண்ணுகிறேன் எனக் கூறியிருந்தார்.

“இலங்கையில் இருந்து லண்டன் சென்று அங்கு தொழிலினை ஆரம்பித்து இன்று மிக பெரிய தொழிலதிபராய் வளர்ந்திருக்கிறார் சுபாஸ்கரன்.

தான் செல்லும் வழியில் தன்னுடன் எடுத்து வந்த பையை விட்டு ஆற்றை கடந்து எந்த ஒரு உடமையும் இல்லாமல் லண்டன் சென்றவர்” என முருகதாஸ் இதன்போது குறிப்பிட்டார்.

அந்த அளவுக்கு வாழ்கையில் அனைத்தையும் இழந்தாலும் தன்னம்பிக்கை இருந்தால் இமையத்தை வெல்லலாம் என்பதற்கு சுபாஸ்கரன் மிக பெரிய எடுத்துகாட்டு எனவும் தெரிவித்துள்ளார்.

விரைவில் லைக்கா புரொடக்ஷன் மற்றும் லைகா மொபைல்ஸ் உள்ளிட்ட லைக்கா குழுமத்தின் நிறுவனங்களின் நிறுவனரான திரு. அல்லிராஜா சுபாஸ்கரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகும் என எதிர்பார்க்கலாம்.

இந்த நிகழ்வில் லைக்கா குழுமத்தின் பிரதித் தலைவர் பிறேம் சிவசாமி, லைக்கா ஹெல்த்,  ஞானம் பவுண்டேஸன் நிறுவனங்களின் இணை நிறுவனரும், அல்லிராஜா சுபாஸ்கரனின் மனைவியுமான பிறேமா சுபாஸ்கரன் உள்ளிட்ட நிறுவனத்தின் முக்கியஸ்த்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை கடந்தவாரம் லைக்கா குழுமத்தின் தலைவர் திரு. அல்லிராஜா சுபாஸ்கரனிற்கு மலேஷிய பல்கலைக்கழகம் கலாநிதி பட்டம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.