Reading Time: < 1 minute

அதிக பாதிப்பை ஏற்படுத்தும் இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட COVID தொற்றின் புதிய திரிபு March மாதத்திற்குள் ஒண்டாரியோவில் (Ontario) ஆதிக்கம் செலுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஒண்டாரியோ சுகாதார அதிகாரிகள் இன்று (வியாழன்) வெளியிட்ட புதிய modelling தரவுகளில் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது. COVID தொற்றுக்கள் குறைந்து வந்தாலும், புதிய தொற்றின் திரிபு ஒண்டாரியோவில் ஒரு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றது. இது March மாதத்திற்குள் மாகாணத்தில் ஆதிக்கம் செலுத்தும் என இன்றைய modelling தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன

தொற்றுக்கான சோதனை குறைந்துவிட்ட நிலையில், மாகாணத்தில் தொற்றுக்களும் நேர்மறை விகிதங்களும் குறைந்து வருவதாக இன்று வெளியான தரவுகள் தெரிவிக்கின்றன. தொற்றின் காரணமாக ஒண்டாரியோவில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துவருவதாக மாகாண அரசாங்கத்தின் தகவல்கள் கூறுகின்றன. ஆனாலும் தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை இன்னும் குறையவில்லை.

இந்த நிலையில் அடுத்த மாத இறுதிக்குள் 150 முதல் 300 நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுவார்கள் என சுகாதார அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். ஒண்டாரியோவின் தீவிர சிகிச்சை பிரிவில் தற்போது 358 நோயாளிகள் COVID தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்றுடன் ஒண்டாரியோவில் COVID தொடர்புடைய மரணங்களின் எண்ணிக்கை 6,000த்தை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.