Reading Time: < 1 minute

அமெரிக்காவை சேர்ந்த மொடர்னா நிறுவனம் கொரோனாவுக்கு எதிராக தயாரித்த தடுப்பூசி உருமாறிய கொரோனா வைரசுக்கு எதிராகவும் செயற்திறனுடன் போராடுகிறது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பிரித்தானியாவில் பரவும் உருமாறிய கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செயற்பாட்டில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்காமல் செயற்படுகிறது. தென்னாபிரிக்காவில் பரவும் உருமாறிய கொரோனா வைரசுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்தது.

ஆனால் தடுப்பூசியின் இரண்டாவது டோசின் போது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பாதுகாக்கும் என்று நம்புகிறோம். இதனால் தென்னாபிரிக்காவில் பரவும் உருமாறிய கொரோனா வைரசுக்கு எதிராக தற்போதுள்ள தடுப்பூசியை மேலும் வீரியம் மிக்கதாக உருவாக்க பரிசோதனைகள் செய்யப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பு பரவிய வைரசை விட உருமாறிய கொரோனா வைரஸ் 70 சதவீதம் வேகமாக பரவக்கூடியது என்றும், அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டது என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.