Reading Time: < 1 minute

இலங்கையில் ஆயுதப் போர் முடிவுக்கு வந்து 13 ஆண்டுகள் நிறைவடைவடைந்துள்ள இவ்வேளையில், முள்ளிவாய்க்கால் படுகொலை உட்பட26 வருட கால ஆயுதப் போரில் கொல்லப்பட்ட அனைவரையும் நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துவதாக கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

அத்துடன், போரில் காணாமல் போனவர்கள், காயமடைந்தவர்கள், போரால் இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் இந்த சோகத்தின் வலி, அதிர்ச்சி மற்றும் இழப்புடன் தொடர்ந்து வாழும் குடும்பங்களுடன் எங்கள் எண்ணங்கள் உள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஆயுதப் போர் முடிவுக்கு வந்து 13 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியால் இலங்கையில் மக்கள் தொடர்ந்து துன்பப்படுவது குறித்து எங்களது கவலையை வெளிப்படுத்துகிறோம். அமைதியான முறையில் போராட்டங்கள் மூலம் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கான மக்களின் உரிமை மற்றும் கருத்துச் சுதந்திரம் மதிக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம்.
மேலும் வன்முறையில் இருந்து விலகியிருக்குமாறு அனைத்துத் தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறோம் எனவும் பிரதமர் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் உட்பட அனைத்து இலங்கை மக்களும் பாதுகாப்பான, அமைதியான மற்றும் நிலைபேறான நாட்டில் வாழ தகுதியானவர்கள்.

தமிழ் சமூகம் மற்றும் இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட ஏனையோரின் அனுபவங்களை பாடமாகக் கொண்டு நிலையான சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் அடைய வேண்டியதன் அவசியத்தை நான் தொடர்ந்து வலியுறுத்துகிறேன்.

போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உயிர் பிழைத்தவர்களுக்கும் நீதி வழங்கும் அர்த்தமுள்ள பொறுப்புக்கூறல் செயல்முறையை தொடங்குவதற்கான அர்ப்பணிப்பை நிறைவேற்றுமாறு இலங்கைக்கு கனடா தொடர்ந்து அழைப்பு விடுக்கிறது.

அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான பாதையில் நகருவதற்கும் மனித உரிமைக் கடமைகளை நிறைவேற்றுவதற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் அனைவருக்கும் கனடா தனது ஆதரவைத் தொடர்ந்து வழங்கி வருகிறது எனவும் கனேடியப் பிரதமர் குறிப்பிட்டார்.

அத்துடன், போரில் பாதிக்கப்பட்ட தங்கள் அருகிலுள்ள தமிழர்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்துமாறு அனைத்துக் கனேடியர்களையும் நான் ஊக்குவிக்கிறேன்.

கடந்த கால அவலங்களைப் பற்றி அறிந்துகொள்வதன் மூலமும், அவற்றைப் பற்றி சிந்திப்பதன் மூலமும், அவை மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிசெய்யவும், அனைவருக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட முடியும் எனவும் முள்ளிவாய்க்கால் 13 ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி கனேடியப் பிரதமர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://pm.gc.ca/en/news/statements/2022/05/18/statement-prime-minister-13th-anniversary-end-armed-conflict-sri-lanka