Reading Time: < 1 minute

மியன்மார் இராணுவ ஆட்சிக்கு ஆயுதங்களை வழங்கிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக கனடா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

சிறப்புப் பொருளாதார நடவடிக்கைகள் (பர்மா) விதிமுறைகளின் கீழ், கனடா இந்த தடைகள் விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுகுறித்து, கனடா தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘மியன்மார் மக்களுடன் கனடா ஒற்றுமையாக நிற்கிறது. இந்த ஆட்சி மனித வாழ்வின் கொடூரமான அலட்சியத்தைத் தொடரும் போது நாம் அமைதியாக இருக்கவும் முடியாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தனது சொந்த மக்கள் மீதான கொடிய தாக்குதல்களை மியன்மார் இராணுவத்தினர் நிறுத்த சர்வதேச சமூகம் அதிக அழுத்தத்தை பிரயோகிக்குமாறு கனடா அழைப்பு விடுத்துள்ளது.

கனடா அரசாங்கம், அமெரிக்க மற்றும் பிரித்தானிய அரசாங்கங்களுடன் ஒருங்கிணைந்து கூடுதல் தடைகளை விதிக்க முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த பொதுத்தேர்தலில் மோசடி நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டி, கடந்த பெப்ரவரி முதலாம் திகதி மியன்மார் இராணுவம் ஜனநாயக ஆட்சியை கவிழ்த்தது.

இதன்பின்னர், நாட்டின் தலைவர் 75வயதான ஆங் சாங் சூகி, ஜனாதிபதி வின் மைண்ட் உட்பட ஆளும் கட்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட தலைவர்களை கைது செய்து வீட்டுக் காவலில் வைத்த இராணுவம், நாடு முழுவதும் ஓராண்டுக்கு அவசரநிலையை பிரகடனப்படுத்தியது.

ஆனால், இராணுவத்தின் இந்நடவடிக்கைக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். ஆனால், போராட்டத்தைக் கடுமையான நடவடிக்கைகள் மூலமாக இராணுவம் ஒடுக்கி வருகிறது.

தற்போதுவரை மியன்மாரில் இராணுவத்துக்கு எதிரான போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.