Reading Time: < 1 minute

துருக்கி இராணுவம், போர் தொடுத்துள்ள சிரியாவின் வடகிழக்கே அமைந்துள்ள அகதி முகாமில் குறைந்தது 25 கனேடியச் சிறுவர்கள் சிக்கியுள்ளதாகவும், அவர்களை பத்திரமாக மீட்டெடுப்பதற்கு கனடா உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அனைத்துலக தொண்டூழிய அமைப்பான ‘சேவ் த சில்ட்ரன்’ கோரிக்கை விடுத்துள்ளது.

எனினும், தற்போது வரை அகதி முகாம் தாக்குதலுக்கு உள்ளாகவில்லை என்றும், தாக்குதலுக்கு முன்னதாக அவர்களை பாதுகாக்க வேண்டுமெனவும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

அந்தச் சிறுவர்கள் பெரும்பாலும் பெற்றோரை இழந்தவர்கள் அல்லது பெற்றோரில் ஒருவரை இழந்தவர்களாக உள்ளதாகவும், எந்த தவறும் செய்யாது துயரத்தை அனுபவிக்கும் அவர்கள் கனடாவுக்கு மீட்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

வடக்கு சிரியாவில் உள்ள தங்கள் எல்லை பகுதியில் இருந்து குர்து இன கிளர்ச்சியாளர்களை வெளியேற்றி, பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்கி அந்த இடத்தில் துருக்கியில் உள்ள 36 இலட்சம் துருக்கி அகதிகளை குடியமர்த்த துருக்கி திட்டமிட்டுள்ளது.

இதன் ஒரு கட்டமாக தற்போது, துருக்கியினால் பயங்கரவாதிகள் என குறிப்பிடப்படும் குர்து இன கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக, அமெரிக்க ஆதரவு பெற்ற குர்து படைகளோடு துருக்கி நேரடியாக மோதலைத் தொடங்கியுள்ளது.

இதனால் துருக்கி தாக்குதலை மேற்கொண்டுள்ள எல்லைப் பகுதியில் இருந்து, சுமார் நூறு கிலோமீட்டர் தென்கிழக்கே அல்-ஹாவியில் அமைந்துள்ள அகதி முகாமில் குறைந்தது 25 கனேடியச் சிறுவர்கள், சிக்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையிலேயே அவர்களை பத்திரமாக மீட்பதற்காக, ‘சேவ் த சில்ட்ரன்’ தொண்டு நிறுவனம் கனடாவிடம் உதவி கோரியுள்ளது.