Reading Time: < 1 minute

கனடாவின் சுட்டுக்கொல்லப்பட்ட இந்தியர் ஒருவரின் மனைவி, தன் கணவருடைய மரணம் தொடர்பில் பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.

புத்தாண்டில் கிடைத்த துயர செய்தி

பரீந்தர் சிங் (Barinder Singh, 51), 2019ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்து எட்மண்டனில் வாழ்ந்துவந்துள்ளார்.

புத்தாண்டு தினத்தன்று அதிகாலை அவரது வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த சிலர், பரீந்தரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார்கள்.

தகவலறிந்து அதிகாலை 2.45 மணிக்கு அந்த வீட்டுக்கு விரைந்த பொலிசார், வீட்டுக்குள் பரீந்தர் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டுள்ளனர். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட பரீந்தர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மனைவி எழுப்பும் கேள்விகள்

இந்தியாவில் டில்லியில் தன் இரண்டு மகள்களுடன் வாழும் பரீந்தரின் மனைவியாகிய ஜஸ்ஜீத் கௌர் (Jasjeet Kaur), கணவரின் மரணம் தங்களை திகிலில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அவர் ஒரு அன்புள்ள மகன், நல்ல சகோதரர், அக்கறையுள்ள ஒரு தந்தை என்று கூறும் ஜஸ்ஜீத், அவர் கனடாவில் வேலை செய்துகொண்டே பஞ்சாபில் வாழும் எனது தாத்தா பாட்டியையும், டில்லியில் வாழும் எங்களையும் நன்றாக கவனித்துக்கொண்டார் என்கிறார்.

எங்களுக்கு நீதி வேண்டும் என்று கூறும் அவர், என் கணவரைக் கொன்றது யார், என் குடும்பம் ஏன் குறிவைக்கப்பட்டது, அவர்களுடைய இலக்கு என் கணவர் மட்டுமல்ல, எங்கள் முழுக்குடும்பமுமே என்கிறார். குற்றவாளி யார், அவர் ஏன் என் கணவரைக் கொலை செய்தார் என்பது எனக்குத் தெரிந்தாகவேண்டும் என்கிறார் ஜஸ்ஜீத்.

பரீந்தர் எதனால் கொல்லப்பட்டார் என்பது இன்னமும் தெரியவராத நிலையில், பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.