Reading Time: < 1 minute

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து அங்கிருந்து தப்பி ஓடி, ஐக்கிய இராஜ்ஜியத்தில் தற்காலிகமாகத் தங்கி அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளில் மீள்குடியேற்றத்திற்காக காத்திருக்கும் சுமார் 1,000 ஆப்கானியர்களை ஏற்றுக்கொள்ள கனடா முடிவு செய்துள்ளது.

அபுதாபியில் உள்ள எமிரேட்ஸ் மனிதாபிமான நகரத்தில் தங்கியுள்ள 5,000 ஆப்கானியர்களில் ஒரு தொகுதியினரை குடியேற்றுவதற்கான அமெரிக்காவின் கோரிக்கைக்கு ஒட்டாவா ஒப்புக்கொண்டுள்ளது.

இவ்வாறு கனடாவில் குடியேற அனுமதிக்கப்படவுள்ள ஆப்கானியர்களை தெரிவு செய்யும் பணிகளை கனடா முன்னெடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

மத சிறுபான்மையினர், கணவனை இழந்த பெண்கள், அரச ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோருக்கு இந்தத் தெரிவில் முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது.

அமெரிக்காவின் வேண்டுகோளின் பேரில் 1,000 பேரை கனடா குடியேற்றவுள்ள அதேவேளை, இதனை விட மேலும் 500 ஆப்கானியர்களை ஏற்கவும் கனடா தயாராகிவருவதாகவும் தெரியவருகிறது.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து அங்கிருந்து தப்பி ஓடி, ஐக்கிய இராஜ்ஜியத்தில் தற்காலிகமாகத் தங்கியிருந்த 10,000 க்கும் மேற்பட்டோரை அமெரிக்கா இதுவரை தனது நாட்டில் குடியேற்றியுள்ளது.

இந்நிலையில் 2024 ஆம் ஆண்டுக்குள் குறைந்தது 40,000 பாதிக்கப்படக்கூடிய ஆப்கானியர்களை கனடாவில் குடியமர்த்த திட்டமிட்டுள்ளதாக கனேடிய குடிவரவுத் துறை அறிக்கை கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.