Reading Time: < 1 minute

பார்படாஸ் தீவுக்கு சுற்றுலா சென்றிருந்த ஒரு லண்டன் தம்பதி, கனேடிய இளம்பெண்கள் இருவரால் உயிர் தப்பிப் பிழைத்திருக்கிறார்கள்.

நீச்சல் பயிற்சிக்காக பார்படாஸ் தீவுக்குச் சென்றிருந்த கனேடிய இளம்பெண்கள் எம்மாவும் (Emma Bassermann,14) சோயியும் (Zoe Meklensek-Ireland,13), கடலிலிருந்து பெண்ணொருவர் உதவி கோரி சத்தமிடுவதைக் கவனித்துள்ளார்கள்.

சத்தமிட்டவர், லண்டனைச் சேர்ந்த பெலிண்டா (Belinda Stone). அவரும், அவரது கணவருமான ராபர்ட்டும் சுற்றுலா சென்றிருந்த நிலையில், இருவரும் கடலில் நீந்தச் சென்றுள்ளார்கள்.

இருவருக்கும் நீச்சல் தெரியுமென்றாலும், கடலின் நீரோட்டத்தில் சிக்கியதால் ஆழமான பகுதிக்கு ராபர்ட் இழுத்துச் செல்லப்பட, உதவி கோரி சத்தமிட்டுள்ளார் பெலிண்டா.

பதின்ம வயதுப் பெண்களின் துணிச்சலான செயல்
அப்போது, நீச்சல் பயிற்சிக்காக கடற்கரைக்கு வந்திருக்கிறார்கள், கனடாவின் மொன்றியலைச் சேர்ந்த எம்மாவும், சோயியும்.

பெலிண்டா சத்தமிடுவதைக் கவனித்த இளம்பெண்கள் இருவரும் உடனடியாக கடலில் குதித்துள்ளார்கள். முதலில் பெலிண்டாவைக் கரைக்குக் கொண்டுவந்துள்ளார்கள் அவர்கள்.

அடுத்து, கடலில் ஆழமான பகுதியில் தவித்துக்கொண்டிருந்த ராபர்ட்டைக் காப்பாற்றச் செல்ல, அங்கு நீரோட்டம் வலிமையாக இருந்ததை உணர்ந்து, கடலில் சர்ஃபிங் செய்ய பயன்படுத்தும் பலகையுடன் ராபர்ட்டை இணைத்து, லாவகமாக அவரை ஆழத்திலிருந்து கரைக்குக் கொண்டு வந்துள்ளார்கள் எம்மாவும், சோயியும்.

குவியும் பாராட்டுக்கள்
வயதான அந்த தம்பதியரை துணிந்து காப்பற்றிய எம்மாவுக்கும், சோயிக்கும் பாராட்டுக்கள் குவிகின்றன. உள்ளூர் மக்கள் அவர்களை ஹீரோ என புகழ, மீட்கப்பட்ட தம்பதியரோ, அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளதுடன், அவர்களை காவல் தேவதைகள் என புகழ்கிறார்கள்.

உள்ளூர் அரசியல்வாதி ஒருவர், இளம்பெண்களின் தைரியத்தை பாராட்டி அவர்களுக்கு பரிசு வழங்கியுள்ளார். ஊடகங்கள் பேட்டிக்காக சூழ்ந்துகொள்கிறார்கள்.

இன்னொரு முக்கியமான விடயம், எம்மா, 2028ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில், நீச்சல் போட்டிகளில் கலந்துகொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.