Reading Time: < 1 minute

அமெரிக்க நிறுவனம் தயாரித்துள்ள நோவாவாக்ஸ் (Novavax) தடுப்பூசி கொரோனா வைரஸூக்கு எதிராக 89.3 வீதமான செயல் திறனை நிரூபித்துள்ளதாக பிரிட்டனில் நடத்தப்பட்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

அத்துடன், கொரோனா வைரஸின் புதிய பிறழ்வுகளையும் இந்தத் தடுப்பூசி எதிர்ப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியை வரவேற்றுள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன், நோவாவாக்ஸ் தடுப்பூசியின் செயல்திறன் குறித்து பிரிட்டனின் மருந்து நெறிமுறை ஆணையம் மதிப்பிடும் என கூறியுள்ளார்.

60 மில்லியன் நோவாவாக்ஸ் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள பிரிட்டன் அந்த நிறுவனத்துடன் ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டால் இங்கிலாந்திலிருக்கும் ஸ்டாக்டன் நகரில் அதன் தயாரிப்பு பணிகள் இடம்பெறும்.

ஒக்ஸ்போர்ட் – ஆஸ்ட்ராசெனேகா, பைசர்- பயோஎன்டெக், மொடர்னா என இதுவரை மூன்று தடுப்பூசிகளுக்கு பிரிட்டன் அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில் நோவாவாக்ஸ் தடுப்பூசிக்கு அடுத்து அனுமதி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

18 முதல் 84 வயது வரையிலான பல்வேறு வயதுடையவர்கள் அடங்கிய, 15,000 பேர் கலந்து கொண்ட நோவாவாக்ஸ் தடுப்பூசி மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனையில், கொரோனா வைரஸுக்கு எதிராக இந்தத் தடுப்பூசி 89.3% செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது.

இந்த பரிசோதனையில் பங்கேற்றவர்களில் 27 சதவீதத்தினர் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் என நோவாவாக்ஸ் கூறியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் பரவிவரும் புதிய பிறழ்வு கொரோனா வைரஸை எதிர்கொள்வதிலும் நோவாவாக்ஸ் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது என நோவாவாக்ஸின் பிரதம நிறைவேற்று அதிகாரியான ஸ்டான் எர்க் தெரிவித்துள்ளார்.

நோவாவாக்ஸ் தடுப்பூசிக்கு பிரிட்டனின் மருந்து ஒழுங்கு கட்டுப்பாட்டு நிறுவனம் அனுமதி வழங்கிய பின்னர் ஸ்டாக்டன் நகரில் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் அதன் உற்பத்தி தொடங்கப்படும் எனவும் ஸ்டான் எர்க் கூறியுள்ளார்.

இதேவேளை, நோவாவாக்ஸ் தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்டால் அதனை உடனடியாகப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை தயாராக இருப்பதாக பிரிட்டனின் சுகாதாரச் செயலர் மேட் ஹென்காக் கூறினார்.

நோவாவாக்ஸ் தடுப்பூசியை சாதாரண குளிரூட்டியில் சேமித்து வைத்துப் பயன்படுத்த முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.