Reading Time: < 1 minute

கல்கரியில் தனது ஐந்து வயது பேரனைக் கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட, 60 வயது தாத்தாவுக்கு ஒருவருக்கு 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கல்கரியைச் சேர்ந்த 60 வயதான அலென் பெர்டோமோ லொப்ஸ் எனப்படும் குறித்த நபர், ஐந்து வயதான எமிலியோ பெர்டோமோ என்ற தனது பேரனை 2015ஆம் ஆண்டில் கொன்றதாக கடந்த மாதம் குற்றஞ்சாட்டப்பட்டது.

இதனையடுத்து வழக்கு தொடரப்பட்டு இதுகுறித்த வழக்கு விசாரணைகள் தீவிரமாக இடம்பெற்று வந்த நிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை) இவ் வழக்கு தொடர்பான இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

நீதிமன்ற விசாரணைகளின் போது குறித்த அந்த நபருக்கு 12 இலிருந்து 15 ஆண்டுகள் வரையில் சிறைத் தண்டனை விதிக்கலாம் என்று நீதிபதி பரிந்துரைத்த போதிலும், ஆறிலிருந்து எட்டு ஆண்டுகள் போதுமானது என்று வழக்குரைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

அனைத்து காரணிகளையும் ஆராயந்த நீதிபதி இறுதியாக குறித்த அந்த நபருக்கு 9 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அறிவித்தார்.

ஐந்து வயதான குறித்த சிறுவன் மெக்சிக்கோவில் வசித்துவந்த நிலையில், சிறுவன் கனடாவில் தாத்தாவுடன் வசிப்பது சிறந்தது என்று கருதிய சிறுவனின் தாயார், பாட்டியுடன் மகனை கனடாவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

கனடாவுக்க வந்து சேர்ந்த ஐந்து மாதத்தில், தலையில் பலத்த அடி காயத்துடன் மூளையில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக அந்தச் சிறுவன் உயிரிழந்துள்ளார். சுய உணர்வற்ற நிலையில் 2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒன்பதாம் திகதி கல்கரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன், கண் திறக்காமலேயே எட்டு நாட்களின் பின்னர் உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது.