Reading Time: < 1 minute

கனேடிய விமான நிலையங்களில் நீண்ட வரிசைகளில் காத்திருந்து பயணிகள் அவதிப்பட்டுவருவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கனடா போக்குவரத்து அமைச்சர் உமர் அல் காப்ரா தெரிவித்துள்ளார்.

நெருக்கடிகளைத் தவிர்க்க கனடா விமான போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் ( CATSA) மற்றும் கூட்டாளர்களுடன் இணைந்து நாங்கள் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம் என்று இன்று ட்விட்டரில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விமானங்களை குறைக்குமாறு விமான நிறுவனங்களை நாங்கள் கேட்டுக் கொண்டதாக வெளிவரும் தகவல்களில் உண்மையில்லை எனவும் உமர் அல் காப்ரா தெரிவித்துள்ளார்.

ரொரன்டோ மற்றும் வான்கூவர் உட்பட கனடாவின் சில பெரிய விமான நிலையங்களில் பணியாளர் பற்றாக்குறையால் பயணிகள் நீண்ட வரிசைகளில் காத்திருக்க நேரிடும் என இந்த மாத தொடக்கத்தில் கனேடிய விமான நிலைய பேரவை (CAC) இடைக்காலத் தலைவர் மொனெட் பாஷர் எச்சரித்தார்.

காத்திருப்பு கொவிட்டுக்கு முந்தைய அளவை விட அதிகமாக இருக்கும் எனவும் அவர் கருத்து வெளியிட்டிருந்தார்.

இதேவேளை, தொற்று நோய் நெருக்கடி தணிந்துவரும் நிலையில் அதிகரித்த விமானப் பயணங்கள் மற்றும் பணியாளர் பற்றாக்குறையால் ஐரோப்பாவில் உள்ள விமான நிலையங்களிலும் சமீபத்திய வாரங்களில் நீண்ட வரிசை மற்றும் தாமதங்கள் ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.