Reading Time: < 1 minute

கனடாவின் ரொறன்ரோவுக்கு நெருக்கமான பஞ்சாப் பாடகர் ஒருவர் கும்பல் ஒன்றால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் சித்து மூஸா வாலா என்ற பிரபல பாடகர் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த நிலையில் கனேடிய கும்பல் ஒன்று சித்து மூஸா கொலையில் தொடர்பிருக்கலாம் என கூறப்படுகிறது.

28 வயதான சித்து மூஸா ஹம்பர் கல்லூரியில் சர்வதேச மாணவராக பயின்றார். மட்டுமின்றி ரொறன்ரோவில் தமது பல இசை வீடியோக்களை பதிவு செய்திருந்தார்.

மேலும், பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியில் இணைந்திருந்த சித்து மூஸா கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்திருந்தார்.

சித்து மூஸாவுக்கு மாநில அரசால் வழங்கப்பட்டு வந்த பொலிஸ் பாதுகாப்பு புதிய ஆம் ஆத்மி கட்சி ஆட்சியால் விலக்கப்பட, இரண்டே நாட்களில் சித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சித்து மூஸாவின் இழப்பு மொத்த சீக்கிய சமூகத்திற்கும் ரொறன்ரோவில் உள்ள பஞ்சாப் மாநிலத்தவர்களுக்கும் பேரிழப்பு என்றார் ரொறன்ரோ ராப்டர்ஸ் பர்மிந்தர் சிங்.

இதனிடையே பிரபல பாடகர் Drake சித்து மூஸா வாலாவுக்கு இரங்கல் தெரிவித்து சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். இந்த நிலையில், பொலிசார் முன்னெடுத்த முதற்கட்ட விசாரணையில், கனடாவை தளமாகக் கொண்ட கும்பல் ஒன்று இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த கொலை தொடர்பாக பஞ்சாப் டிஜிபி விகே பவுரா கூறுகையில், லாரன்ஸ் பிஸ்னோய் கும்பல் இந்த கொலையில் ஈடுபட்டுள்ளது. அந்த குழுவை சேர்ந்த லக்கி என்பவர் கனடாவில் இருக்கும் நிலையில் கொலைக்கு பொறுப்பேற்றுள்ளார். இவர்கள் மீது ஏற்கனவே கொலை உள்ளிட்ட பல குற்றவியல் வழக்குகள் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.