Reading Time: < 1 minute

கனடவின் புதிய உச்ச நீதிமன்ற நீதிபதியாக இந்திய வம்சாவளி நபர் பொறுப்பேற்றுக்கொண்டார்.

எளிமையான விழா ஒன்றில் கனடாவின் புதிய உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்டுள்ள நீதிபதி Mahmud Jamal பன்மைத்துவத்தில் தாம் நிலையான நம்பிக்கை கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக ஆசிய வம்சாவளி நபர் நீதிபதியாக பொறுப்பேற்றுள்ளார் என கூறப்படுகிறது. வியாழக்கிழமை நடந்த விழாவில் புதிய நீதிபதியை சட்டத்தரணிகள் உட்பட பலர் வரவேற்றுள்ளனர்.

தொடர்ந்து எளிமையாக முன்னெடுக்கப்பட்ட விழாவில் நீதிபதி Mahmud Jamal பொறுப்பேற்றுக்கொண்டார். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக நீதிபதி ஜமாலின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பலர் விழாவில் கலந்து கொள்ள முடியாமல் போனதுடன், இணையத்தினூடே நிகழ்ச்சிகளை காண நேர்ந்துள்ளது.

இந்திய பெற்றோருக்கு கென்யாவின் நைரோபியில் 1967ல் பிறந்த ஜமால், இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்துள்ளார். தொடர்ந்து 1981ல் குடும்பத்தினருடன் கனடாவின் எட்மண்டனில் குடிபெயர்ந்துள்ளனர்.

இங்கேயே அவர் தமது பள்ளிப்படிப்பை முடித்துள்ளார். ஜமாலின் மனைவியின் குடும்பம் கூட 1979 புரட்சியின் போது ஈரானில் இருந்து கனடாவுக்கு அகதியாக குடியேறியவர்கள் என்றே தெரிய வந்துள்ளது.

கனடாவின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நீண்ட 17 ஆண்டுகள் பணியாற்றியுள்ள Rosalie Abella ஓய்வு பெற்றதை அடுத்து, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ புதிய நீதிபதியாக ஜமாலை நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.