Reading Time: < 1 minute

கனடாவில் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய கடவுச்சீட்டு தொடர்பில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த கடவுச்சீட்டை பயன்படுத்தும் பிரஜைகள் கடவுச்சீட்டு தரம் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

நான்கு நாட்களிலேயே சுருளும் கடவுச்சீட்டு
கனடிய கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டு நான்கு நாட்களிலேயே அந்த கடவுச்சீட்டு சுருள்வதாகவும், விரிந்திருப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பழைய கடவுச்சீட்டில் இவ்வாறான எந்த பிரச்சனையும் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இந்த புதிய கடவுச்சீட்டு மடங்குவதாகவும் சுருள்வதாகவும் பயனர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

புதிய கடவுச்சீட்டு வெப்பம் மற்றும் ஈரப்பதம் ஆகிய காரணிகளின் அடிப்படையில் சுருள்வதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கடவுச்சீட்டுக்கள் தயாரிக்கப்பட்டுள்ள முறையின் அடிப்படையில் இவ்வாறு சுருள்வதாக கனடிய குடிவரவு, ஏதிலிகள் மற்றும் குடிவரவு முகவம் தெரிவித்துள்ளது.

கூடுதல் பாதுகாப்பு நோக்கில் இந்த கடவுச்சீட்டுக்கள் தயாரிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறெனினும், இந்த கடவுச்சீட்டுகள் உரிய தரத்தில் இல்லை என சிலர் விசனம் வெளியிட்டுள்ளனர்.

பயனர்கள் அதிருப்தி
பொது இடங்களில், நிறுவனங்களில் இந்த கடவுச்சீட்டை கொடுக்க முடியாது இருப்பதாகவும் அது சுருங்குவதாகவும் மடங்குவதாகவும், விரிந்து இருப்பதாகவும் கடவுச்சீட்டு பயனர்கள் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

கடந்த 23 ஆம் திகதி வரையில் சுமார் 15600 புதிய கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடவுச்சீட்டு மடங்குதல் மற்றும் சுருள்வதை தவிர்க்க வேண்டுமாயின் அவற்றை பாதுகாப்பான இடங்களில் வைக்குமாறும், குளிர்ச்சியான மற்றும் உலர்ந்த இடத்தில் அதனை வைக்குமாறும், ஃபைல் கவர் அல்லது பேங்க் சேஃப்டி பாக்ஸ் போன்ற ஒன்றில் கடவுச்சீட்டை வைத்துப் பேணி பாதுகாக்குமாறும் அரசாங்கம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

இந்த புதிய கடவுச்சீட்டுக்கள் மீள பெற்றுக் கொள்ளப்படுமா என எழுப்பிய கேள்விக்கு அவ்வாறு மீளப் பெற்றுக் கொள்ளப்படாது என அரசாங்க தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.