Reading Time: < 1 minute

நான் உங்கள் பேரன், எனக்கு உதவி வேண்டும் என்று கூறி, பாட்டி ஒருவரை ஏமாற்ற முயன்றுள்ளார் இளைஞர் ஒருவர்.

ஆனால், பாட்டியில் சாதுர்யமான செயலால், இன்று கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார் அவர்.

இது ஒரு அருமையான விழிப்புணர்வு செய்தி…

பாட்டிக்கு வந்த தொலைபேசி அழைப்பு

ஒன்ராறியோவின் விண்ட்சரில் வாழும் Bonnie Bednarik என்னும் பெண்மணிக்கு நேற்று முன்தினம் ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

தொலைபேசியில் அழைத்தவர், பாட்டி, நான்தான் உங்கள் பேரன், என் நண்பனுடன் காரில் செல்லும்போது ஒரு விபத்தாகிவிட்டது, அவன் காரில் போதைப்பொருள் வைத்திருந்திருக்கிறான்.அவனை பொலிசார் கைது செய்துவிட்டார்கள்.

அவனை ஜாமீனில் எடுக்க பணம் வேண்டும். 9,300 டொலர்கள் வேண்டும் என்று கேட்டுள்ளார் அந்த நபர்.

இதுபோன்ற மோசடிகள் குறித்து ஏற்கனவே கேள்விப்பட்டிருந்த Bonnie, சரி அப்பா, என்னால் உடனடியாக அவ்வளவு பணம் எடுக்கமுடியுமா என்று தெரியவில்லை, வங்கியில் கேட்டுச் சொல்கிறேன் என்று கூற, சரி பாட்டி, நான் 15 நிமிடம் கழித்து கூப்பிடுகிறேன் என்று கூறியுள்ளார் அந்த இளைஞர்.

பாட்டி உடனே பொலிசாரை அழைத்து விவரத்தைச் சொல்லிவிட்டார். பின்னர் 15 நிமிடங்கள் கழித்து, சொன்னதுபோலவே அந்த இளைஞர் மீண்டும் அழைக்க, தாத்தா வீட்டில் இல்லை, அவர் வந்ததும் ஒரு மணி நேரத்தில் அவரது காரில் சென்று பணம் எடுத்துவந்துவிடுகிறேன் என்று கூறியுள்ளார் Bonnie.

ஏமாற்ற நினைத்தவர்கள் ஏமாந்தார்கள்

அதற்குள் பொலிசார் வந்து Bonnie வீட்டில் ட்ராக் செய்யும் கருவிகளைப் பொருத்தி அடுத்த அழைப்புக்காக காத்திருக்கிறார்கள்.எதிர்பார்த்ததுபோலவே அடுத்த அழைப்பு வர, அழகாகச் சென்று சம்பந்தப்பட்டவர்களை கோழியை அமுக்குவதுபோல அமுக்கிவிட்டார்கள் அவர்கள்.

பாட்டியின் சாதுர்யத்தால், மோசடியில் ஈடுபட்ட விண்ட்சரைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவரும், Tecumseh என்ற இடத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவரும் பொலிசாரிடம் சிக்கிக்கொண்டார்கள்.

ஏற்கனவே இதேபோல் முதியவர்களை ஏமாற்றி அந்த இளைஞர்கள் பதுக்கி வைத்திருந்த பணத்தினை பொலிசார் பறிமுதல் செய்துள்ளார்கள்.

பொதுவாக இதுபோன்ற மோசடிகளில் முதியவர்கள் ஏமாந்துவிடும் நிலையில், தான் தப்பியதுடன் மோசடியாளர்களையும் சிக்கவைத்த Bonnieயை பாராட்டி, சிறு பரிசொன்றையும் அவருக்கு வழங்கியுள்ளார்கள் பொலிசார்.