Reading Time: < 1 minute

ரொறன்ரோவில் சாலை விபத்தில் சிக்கிய பாதசாரி ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தொடர்புடைய சாரதி கைதாகியுள்ளார்.

ரொறன்ரோவின் Church-Wellesley சந்திப்பில் நள்ளிரவு கடந்த வேளையில் குறித்த சாலை விபத்து பதிவாகியுள்ளது. 36 வயதான அந்த பாதசாரி, சர்ச் தெருவின் கிழக்குப் பக்கம் நடந்து சென்றுகொண்டிருந்த போது சாம்பல் நிற ஹோண்டா மினிவேன் மோதியுள்ளது.

மட்டுமின்றி, சுமார் 100 மீற்றர் தொலைவுக்கு அந்த நபர் வாகனத்தில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பு கண்டறிந்துள்ளது.

இந்த நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அந்த நபர், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தை ஏற்படுத்திய நபர் முதலில் அந்த இடத்தை விட்டு தப்பிவிட்டார் என்றே பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஆனால் பின்னர் வெல்லஸ்லி மற்றும் ஷெர்போர்ன் தெருக்களுக்கு அருகில் பொலிசார் அவரை கைது செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், அவரது பெயர் சுபம் ஜோஷி என தெரியவந்துள்ளது. 25 வயது இந்தியரான அவர், மிசிசாகா பகுதியில் வசித்து வருகிறார்.

தற்போது அவர் மீது விபத்தை அடுத்து வாகனத்தை நிறுத்தாமல் சென்றது உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

இதனிடையே, சம்பவ இடத்தில் முழு விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. சம்பவத்தை நேரில் பார்த்த அல்லது தகவல் தெரியவரும் பொதுமக்கள் விசாரணைக்கு உதவ வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.