Reading Time: < 1 minute

கனேடிய சமஷ்டி அரசாங்கம் ஆடம்பர பொருட்களுக்கு புதிய வரி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

ஆடம்பர கார்கள், ஆடம்பர தனியார் விமானங்கள், படகுகள் போன்றவற்றுக்கு இவ்வாறு வரி அறவீடு செய்யப்பட உள்ளது.

இந்த மாதம் 1ம் திகதி தொடக்கம் இந்த வரி அறவீட்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

சமஷ்டி அசராங்கத்தின் கடந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஆடம்பரப் பொருள் வரி குறித்து அறிவிக்கப்பட்டது.

எனினும் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரையில் இந்த சட்டம் அமுல்படுத்தப்படவில்லை. செல்வந்த கனேடியர்கள் தங்களது வரிச் செலுத்துகைகளை நியாயமாக செய்கின்றார்கள் என்பதனை உறுதி செய்வதற்கு இந்த வரி அறவீட்டு நடைமுறை உதவும் என நிதி அமைச்சர் கிறிஸ்டியா ப்ரீலாண்ட் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், இந்த புதிய வரி அறவீட்டு நடைமுறையானது தங்களது தொழிலை மோசமாக பாதிக்கும் என விமான மற்றும் படகு உற்பத்தியாளர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

2018ம் ஆண்டின் பின்னர் உற்பத்தி செய்பய்பட்ட குறிப்பிட்ட தொகைக்கு மேல் பெறுமதியான படகுகள். கப்பல்கள், விமானங்களுக்கு வரி அறவீடு செய்யப்பட உள்ளது.

10 வீதம் முதல் 20 வீதம் வரையில் வரி அறவீடு செய்யப்பட உள்ளது. உற்பத்தியாளர்கள், மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள் மற்றும் இறக்குமதியாளர்குள் இந்த வரியை செலுத்த வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மீது இந்த வரி சுமத்தப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.