Reading Time: 1 minute

கனடா – தலைநகர் – ஒட்டாவாவை முற்றுகையிட்டு வெளியேற மறுக்கும் போராட்டக்காரர்களை கைது செய்து அங்கிருந்து அகற்றும் நடவடிக்கையை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

பெருமளவான பொலிஸார் போராட்டக்காரர்களை முற்றுகையிட்டு அவர்களைக் கைது செய்துள்ளனர். அத்துடன், நகரை முற்றுகையிட்டுள்ள வாகனங்களும் அங்கிருந்து அகற்றப்பட்டு வருகின்றன.

நேற்று மட்டும் போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தமரா லிச், கிறிஸ் பார்பர் மற்றும் பாட் கிங் உட்பட 100க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். 21 வாகனங்கள் பொலிஸாரால் அகற்றி எடுத்துச் செல்லப்பட்டன.

போராட்டக்காரர்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடர்ந்து தீவிரமாக முன்னெடுக்கப்படும் என நேற்று வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட ஒட்டாவா பொலிஸ் இடைக்காலத் தலைவர் ஸ்டீவ் பெல் கூறினார். நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அதிகளவான பொலிஸார் களமிறக்கப்பட்டுள்ளதாகவும் அவா் குறிப்பிட்டார்.

ஒட்டாவாவில் இயல்பு நிலை ஏற்பட்டு நகர குடியிருப்பாளர்களின் இயல்பு வாழ்க்கை உறுதி செய்யப்படும். போராட்டக்காரர்களை முழுமையாக அகற்றும் வரை 24 மணி நேரமும் பொலிஸாரின் நடவடிக்கை தொடரும் எனவும் ஸ்டீவ் பெல் கூறினார்.

பொலிஸாருக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடுகளின் போது ஒரு அதிகாரிக்கு சிறிய காயம் ஏற்பட்டதாகவும் பெல் தெரிவித்தார்.

ஒட்டாவா – ரிடோ தெருவில் (Rideau Street) எதிர்ப்பாளர்களை அகற்றும் முயற்சியின்போது நேற்று மோதல் போக்கு ஏற்பட்டது. போராட்டக்காரர்களில் சிலர் மீது மிளகு தெளிப்பான் (pepper spray) பயன்படுத்தப்பட்டு அவர்கள் அங்கிருந்து தூக்கிச் செல்லப்பட்டனர். தங்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியதாக சில எதிர்ப்பாளர்கள் கூறினர்.

மத்திய அரசின் கட்டாய கொவிட் தடுப்பூசி ஆணை மற்றும் கொவிட் கட்டுப்பாடுகளை எதிர்த்து நாடாளுமன்றம் அமைந்துள்ள வெலிங்டன் தெரு மற்றும் அதன் சுற்றுப்புறங்களை முற்றுகையிட்டு ஜனவரி மாத இறுதியில் இருந்து எதிர்ப்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாகனங்களில் இருந்து ஒலியெழுப்ப நீதிமன்றம் பிறப்பித்துள்ள தடை உத்தரவுகளையும் போராட்டக்காரர்கள் மீறி வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் போராட்டக்காரர்களை கைது செய்து அகற்றுவதற்கான உடனடி நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என ஒட்டாவா நகர பொலிஸார் வியாழக்கிழமை விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து கைது நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்து அகற்றும் நடவடிக்கையில் ஒன்டாரியோ மற்றும் கியூபெக்கின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்துள்ள ஆர்.சி.எம்.பி. பொலிஸாரும் இணைந்துள்ளனர்.

நான்காவது வாரமாக இந்த வார இறுதியிலும் நகரை முடக்கும் போராட்டத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடங்கலாம் என எச்சரிக்கப்பட்டிருந்த நிலையிலேயே கைது நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

இதேவேளை, போராட்டங்களை ஒடுக்கும் வகையில் கனடாவில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவசரகாலச் சட்டத்தைப் அமுல்படுத்தியுள்ளார். அவசரகால சட்டத்தின் பயன்பாடு நியாயமான, மற்றும் வரையறுக்கப்பட்ட அளவில் இருக்கும். இராணுவம் நிலைநிறுத்தப்படாது என ட்ரூடோ குறிப்பிட்டார்.

இதன்மூலம் போராட்டங்களுடன் தொடர்புடைய எந்தவொரு நபரினதும் தனிப்பட்ட கணக்குகளையும் நீதிமன்ற உத்தரவு இல்லாமல், வங்கிகள் முடக்கி வைக்க முடியும்.

பொலிஸாருக்கு இதன் மூலம் அதிக அதிகாரம் அளிக்கப்படும். பயங்கரவாத நிதியளிப்பு தடை உத்தரவை போன்று வாகன சாரதிகளின் போராட்டங்களை நிதியளிக்கும் மூலங்களைக் கண்டறிந்து முடக்கவும் பயங்கரவாத சட்டம் அதிக அதிகாரங்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.