Reading Time: < 1 minute

உக்ரைனில் ரஷ்ய துருப்புக்கள் முன்னெடுத்த பாலியல் குற்றங்களை விசாரிக்கும் பொருட்டு சர்வதேச சமூகத்திற்கு உதவ கனடா 1 மில்லியன் டொலர் கூடுதலாக வழங்க உள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிப்பதற்கு கனடா கூடுதல் நிதியை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு வழங்கும் என்று வெளியுறவு அமைச்சர் மெலானி ஜோலி தெரிவித்துள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உளவியல் உதவிகள் வழங்கவும் இந்த நிதி பயன்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது. உக்ரேனிய மக்களுக்கு எதிராக போர் கருவியாக பாலியல் வன்முறையைப் பயன்படுத்திய ரஷ்ய துருப்புக்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவது முக்கியம் என்று அமைச்சர் ஜோலி தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் போர் சூழலில் பெண்கள் மற்றும் சிறார்கள் மீது முன்னெடுக்கப்பட்ட அட்டூழியங்களை கடுமையாக கண்டிப்பதாக கூறியுள்ள கனடா, தவறிழைத்தவர்கள் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கனடாவிற்கான உக்ரைன் தூதர் தெரிவிக்கையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையை போரின் ஆயுதமாக ரஷ்யா பயன்படுத்துகிறது என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.