Reading Time: < 1 minute

ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள நிலையில், தங்கள் வாடிக்கையாளர்கள், உக்ரைன் நாட்டிலுள்ள தங்கள் உறவினர்களைத் தொடர்பு கொள்வதை எளிதாக்குவதற்காக கனேடிய தொலைபேசி நிறுவனங்கள் நல்ல நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளன.

அதன்படி, உக்ரைனுக்கு அனுப்பப்படும் குறுஞ்செய்திகள் மற்றும் தொலைதூர அழைப்புகளை இலவசமாக்கியுள்ளன சில தொலைபேசி நிறுவனங்கள்.

Bell Canada, Rogers Communications Inc., Telus Corp. மற்றும் Shaw Communications Inc ஆகிய நிறுவனங்கள், பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் உள்ள தங்கள் அன்பிற்குரியவர்களைத் தொடர்பு கொள்வதற்காக தொலைபேசி கட்டணம் செலுத்தத் தேவையில்லை என அறிவித்துள்ளன.

Rogers மற்றும் Fido Solutions நிறுவனங்கள், தொலைதூர அழைப்புகள், குறுஞ்செய்திகளுக்கான கட்டணம் மற்றும் உக்ரைனில் உள்ள வாடிக்கையாளர்களின் ரோமிங் கட்டணமும் மார்ச் மாத இறுதி வரை நீக்கப்படுவதாக அறிவித்துள்ளன.

Telus மற்றும் SaskTel நிறுவனங்கள், தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திக்கான கட்டணங்களை ரத்து செய்துள்ளதோடு, உக்ரைனிலுள்ளவர்களுக்கு இணைய சேவை கட்டணத்தையும் ரத்து செய்துள்ளன. அத்துடன், உக்ரைனில் இருக்கும் தங்கள் உறவினர்களுடன் கனடாவிலிருப்பவர்கள் பேசுவதற்கான மற்றும் குறுஞ்செய்தி அனுப்புவதற்கான கட்டணங்களையும் ரத்து செய்துள்ளன.

Shaw மற்றும் அதற்கு சொந்தமான Freedom Mobile ஆகிய நிறுவனங்களும் மார்ச் 31 வரை தொலைதூர அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளுக்கான கட்டணத்தை ரத்து செய்துள்ளன.

பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் இருக்கும் தங்கள் அன்பிற்குரியவர்களுக்கு என்ன ஆயிற்றோ என்னும் பதற்றத்தில் இருப்பவர்களுக்கு கனேடிய தொலைபேசி நிறுவனங்களின் இந்த உதவி நிச்சயம் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.