Reading Time: < 1 minute

அமெரிக்கா மற்றும் கனடாவில் கோவிட்-19 தடுப்பூசி போடும் செயற்பாடுகள் விரிவுபடுத்தப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் கோடையில் இரு நாடுகளின் எல்லைகளை மீண்டும் திறக்க வேண்டும் என அமெரிக்க அரசியல்வாதிகள் சிலர் ஜனாதிபதி ஜோ பைடனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கனடா பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவுடன் இணைந்து இந்தக் கோடை காலத்தில் எல்லைகளை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜோ பைடனுக்கு நியூயோர்க்கை பிரதிநிதித்துவப்படுத்தும் அமெரிக்கா காங்கிரஸ் பிரதிநிதி பிரையன் ஹிக்கின்ஸ் எழுதியுள்ள கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஏனைய சில அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதிகளுடன் இணைந்து அவர் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்.

காங்கிரஸின் வடக்கு எல்லைகளை பிரதிநிதித்துவம் செய்யும் ஹிக்கின்ஸ், இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய எல்லைக் கட்டுப்பாடுகளால் எல்லைகளில் உள்ள இரு நாட்டவர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

எல்லைகள் மூடப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளைக் கருத்தில் கொண்டு சில கட்டுப்பாடுகளுடன் எல்லைகளை திறக்கும் முயற்சிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் அந்தக் கடிதத்தில் ஹிக்கின்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

அனைத்து அமெரிக்கர்களும் மே மாத இறுதிக்குள் குறைந்தது ஒரு தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும் என ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த வாரம் அறிவித்திருந்த நிலையில் இவ்வாறான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோவிட்19 தொற்று நோயை அடுத்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அமெரிக்கா – கனடா எல்லைகள் அத்தியாவசியமற்ற பயணங்களுக்காக மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.