Reading Time: < 1 minute

கனடாவுக்குள் அகதிகள் வரும் பாதை ஒன்றை நிரந்தரமாக மூடவேண்டும் என பெடரல் அரசை கியூபெக் மாகாண பிரீமியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதாவது, கனடா அமெரிக்க எல்லையில் Roxham Road என்றொரு கிராம சாலை உள்ளது. அமெரிக்காவிலிருந்து அகதிகள் அந்த சாலை வழியாக கனடாவுக்குள் நுழைந்துவிடுவதுண்டு. அந்த பகுதி கியூபெக் மாகாணத்தில் ஒன்ராறியோ நகரின் தெற்கே அமைந்துள்ளது.

பெருந்தொற்று காலகட்டத்தில் அந்த சாலையில் உள்ள எல்லை கடக்கும் பகுதி பெரும்பாலும் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது அது திறக்கப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் அகதிகள் கனடாவுக்குள் நுழையத் துவங்கியுள்ளார்கள்.

ஆனால், நாளொன்றிற்கு நூற்றுக்கும் மேற்பட்ட அகதிகள் அந்த பாதை வழியாக கியூபெக் மாகாணத்துக்குள் நுழைவதாகவும், தங்களால் அத்தனை பேரை ஏற்றுக்கொள்ள இயலாது என்றும் கியூபெக் பிரீமியரான François Legault கூறியுள்ளார்.

ஆகவே, அந்தப் பாதையை நிரந்தரமாக மூடவேண்டும் என பெடரல் அரசை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆனால், அகதிகள் ஆதரவு தொண்டு நிறுவனங்களோ, கியூபெக்கில் ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளன. நமக்கு வேலைக்கு ஆள் தேவைப்படும் நிலையில், அந்த அகதிகளை ஏற்றுக்கொள்ளவேண்டியதுதானே என்கிறார்கள்.

Canadian Council for Refugees என்ற அமைப்பின் எக்சிகியூட்டிவ் இயக்குநரான Janet Dench என்பவர் கூறும்போது, பெருந்தொற்று காலகட்டத்தின்போது Roxham Road பகுதியிலுள்ள கனடா எல்லை வழியாக கனடாவுக்குள் நுழைந்தவர்களுக்கே முதியோர் இல்லங்களில் வேலை கிடைத்தது என்கிறார்.

ஆகவே, நம்மிடம் வேலையும் உள்ளது, தேவையும் உள்ளது, சொல்லப்போனால் நிறைய பேருக்கு வேலை உள்ளது என்று கூறும் அவர், ஒரு பிரச்சினை என்னவென்றால், பெடரல் அரசு இந்த புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு பணி அனுமதி வழங்குவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம்தான் என்கிறார்.

மக்கள் கனடாவுக்குள் நுழைந்ததும், அவர்களுக்கு எளிதாக பணி அனுமதிகளைக் கொடுத்துவிட்டால் பிரச்சினையை எளிதாக சமாளிக்கலாம். நம்மிடம் ஏற்கனவே ஏராளம் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், அவர்களுக்கு வேலையும் கிடைத்துவிடும் என்கிறார் Janet.