Reading Time: < 1 minute

கனடாவுக்கு வந்து இரண்டு மாதங்களே ஆன நிலையில், இந்தியர் ஒருவர் கத்தியால் குத்தப்பட, அதைத் தொடர்ந்து பல மோசமான அனுபவங்களை சந்தித்த அவரது மனைவி, இது தங்களுக்குக் கனடாவில் கிடைத்த மோசமான வரவேற்பு என்கிறார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள White Rock என்னுமிடத்தில், மன்பிரீத் கௌர் (Manpreet Kaur) தன் கணவரான ஜதீந்தர் சிங்குடன் (Jadinder Singh) அமர்ந்து காற்றுவாங்கிக்கொண்டிருந்திருக்கிறார்.

திடீரென ஜதீந்தர் வலியால் துடித்தபடி தன் கழுத்தைப் பிடித்துக்கொள்ள, திரும்பிப் பார்த்தால், ஒருவர் கையில் கத்தியுடன் நின்றுகொண்டிருந்திருக்கிறார்.

யார் அந்த நபர், அவர் எதற்காக தன் கணவரை கத்தியால் குத்தினார் என்பது புரியாம் விழித்த மன்பிரீத் சத்தமிட்டும் அந்த நபர் அங்கிருந்து செல்லவில்லையாம். உடனே, கணவனும் மனைவியும் அந்த நபரிடமிருந்து தப்ப, அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார்கள்.

தன் கணவர் கழுத்திலிருந்து இரத்தம் சொட்டச் சொட்ட கதறியும் ஒருவர் கூட உதவிக்கு வரவில்லை என்று கூறும் மன்பிரீத், பின்னர், தானே ஆம்புலன்சை அழைத்துள்ளார். ஆனால், அவர்கள் தன்னைத் தன் கணவனுடன் ஆம்புலன்சில் ஏற அனுமதிக்கவில்லை என்கிறார் அவர். அதுமட்டுமின்றி பின்னர் அவரை பொலிசார் தங்கள் வாகனத்தில் அழைத்துச் செல்ல, தவறான ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் மன்பிரீத்.

தாங்கள் கனடாவுக்கு இப்போதுதான் வந்துள்ள நிலையில், தன் கணவர் மட்டுமே வேலை செய்வதாகவும், இப்போது அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அவரால் வேலை செய்யமுடியாது என்பதுடன், தன்னால் எப்படி மருத்துவமனை பில்லைக் கட்டமுடியும் என்றும் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்புகிறார் மன்பிரீத்.

விடயம் என்னவென்றால், இந்த மோசமான சம்பவம் நிகழ்ந்து ஒரு வாரத்திற்குப் பின், அதே White Rock என்னுமிடத்தில், செவ்வாய்க்கிழமையன்று, குல்விந்தர் சோஹி (Kulwinder Sohi, 27) என்னும் இந்தியர் கத்தியால் குத்தப்பட்டுள்ளார். அவர் சிகிச்சை பலனின்றி இறந்தும்விட்டார்.

கத்தியால் குத்திய நபர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்பதுடன், இரண்டு பேரையும் கத்தியால் குத்தியது ஒரே நபரா என்பதும் இன்னமும் தெரியவரவில்லை. இப்படி, சில நாட்கள் வித்தியாசத்தில், இரண்டு இந்தியர்கள் ஒரே இடத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் உயிரிழந்தும்விட்ட விடயம், பெரும் சோகத்தையும் கடும் அதிர்ச்சியையும் உருவாக்கியுள்ளது.