Reading Time: 2 minutes

முன்னாள் இலங்கை பாதுகாப்புச் செயலர் `கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் தொடர்பாக அவருக்கு நேற்றிரவு எழுத்துமூல அறிவிப்புகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

முதலாவது வழக்கை படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் (Lasantha Wickremetunga) மகள் அசிம்சா விக்ரமதுங்க தாக்கல் செய்துள்ளார்.

இரண்டாவது வழக்கை, சித்திரவதையினால் பாதிக்கப்பட்ட கனடிய தமிழர் ஒருவரின் சார்பில் அனைத்துலக உண்மைக்கும் நீதிக்குமான திட்டம் என்ற மனித உரிமை அமைப்பு தாக்கல் செய்துள்ளது.

தமது தந்தையின் படுகொலைக்குக் காரணமானவர் என்ற அடிப்படையில் கலிபோர்னியாவில் உள்ள நீதிமன்றத்தில், அசிம்சா விக்ரமதுங்க தாக்கல் செய்துள்ள சிவில் பாதிப்பு வழக்குத் தொடர்பாக, நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கோத்தபாய ராஜபக்சவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கலிபோர்னியாவில் உள்ள அமெரிக்கன் பல்பொருள் அங்காடி வளாகத்தில் உள்ள Traders Joe’s என்ற வணிக நிலையத்தின் வாகனத் தரிப்பிடத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு கோத்தாவிடம் இந்த இரண்டு வழக்குத் தொடர்பான நீதிமன்ற அறிவித்தல் அவரது கையில் வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை படையினரின் சித்திரவதைகளால் பாதிக்கப்பட்ட ஒருவரின் சார்பில், யஸ்மின் சூகா தலைமையிலான அனைத்துலக உண்மைக்கும் நீதிக்குமான திட்டம், அமெரிக்க சட்ட நிறுவனமான Hausfeld உடன் இணைந்து மற்றொரு வழக்கை கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்துள்ளது.

www.eugenflorinzamfirescu.com

சித்திரவதைகளால் பாதிக்கப்பட்ட றோய் சமாதானம் என்ற கனடிய தமிழரே, கோத்தபாய ராஜபக்சவிடம், இழப்பீடு கோரி இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.

கனடாவில் வசிக்கும் இவர், 2007ஆம் ஆண்டு கொழும்பில் கைது செய்யப்பட்டு உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டிருந்தார். 2010ஆம் ஆண்டு இவர் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இது தொடர்பாக கனடாவை சேர்ந்த றோய் சமாதானம் அவர்களை டொரோண்டோ தமிழ் (TorontoTamil.com) தொடர்புகொண்டு இந்த நீதிமன்ற அறிவிப்பு தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக்கொண்டது.

இந்த சிவில் பாதிப்பு வழக்குத் தொடர்பாக, கோத்தபாயவிடம் நேற்றிரவு Traders Joe’s வாகனத் தரிப்பிடத்தில் வைத்து அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

அதை பெற்றுக்கொண்ட கோத்தபாய ராஜபக்ச்ச அதை பிரித்து பார்த்துவிட்டு அந்த இடத்திலேயே வீசிவிட்டு சென்றுவிட்டார். ஆனால் இதை சமர்ப்பிக்கும்போது வழங்கியோர் வீடியோ பதிவையும் மேற்கொண்டனர்.

கோத்தபாய கடிதத்தை பெற்று வீசியெறிந்த விடியோவை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த வழக்கறிஞர், குற்றப்பத்திரிகை கோத்தபாய பெற்றுக்கொண்டதாக நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது என தெரிவித்தார்.

திருமணம் ஒன்றில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றிருந்த கோத்தபாய ராஜபக்ச அடுத்த சில நாட்களில் நாடு திரும்பவிருந்தார். இந்த நிலையிலேயே அவருக்கு எதிராக, இருவேறு சட்ட நிறுவனங்களால் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதனால் கோத்தாபய ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமை துறப்பு செயற்பாடுகளில் பெரும் நெருக்கடி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.