தமிழீழ விடுதலைப் போராட்டப் பாடல்களின் மூலம் உலகத் தமிழர்களின் இதயத்தில் அழியாத இடம்பிடித்த பிரபல பாடகர் தேனிசை செல்லப்பா அவர்கள் இன்று (ஏப்ரல் 28) காலமானார். உடல்நலக்குறைவால் தனது 85ஆவது வயதில் உயிரிழந்த அவர் மறைவு, உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் சிங்கிலிப்பட்டி என்ற சிற்றூரில் பிறந்த செல்லப்பா, இளம்வயதிலேயே குடும்பப் பொறுப்புகளைச் சுமந்தவர். கலை மீது கொண்ட ஈர்ப்பினால் நடிகவேள் எம்.ஆர். ராதாவை சந்தித்து, அவரது நாடகக் குழுவில் இணைந்து பாடலும் நடிப்பும் மூலம் தன் கலைப் பயணத்தைத் தொடங்கினார்.
பின்னர் திராவிட இயக்க மேடைகளிலும், நாம் தமிழர் இயக்க நிகழ்வுகளிலும் உணர்வெழுச்சி பாடல்களைப் பாடி மக்கள் மனதில் தனி இடம்பிடித்தார். அவரது குரலின் ஆழமும், பாடல்களின் தாக்கமும் பலரையும் கவர்ந்தது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் போது, விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை சந்தித்ததன் பின்னர், தமிழீழ உணர்வை உலகம் முழுவதும் பரப்பிய குரலாக அவர் மாறினார். அதன் பின்னர் பதிவு செய்யப்பட்ட பல பாடல்கள் ஈழத்தில் போராளிகளிடமும் பொதுமக்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றன.
“வாருங்கள் புலிகளே தமிழீழம் காப்போம்…”,
“குண்டு விழுந்தாலென்ன, வீடு குலுங்கி இடிந்தாலென்ன…”
போன்ற அவரது பாடல்கள், போராட்ட காலங்களில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உற்சாகமும் உறுதியும் அளித்தன.
1990ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் கோட்டை மைதானத்தில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் முன்னிலையில் அவர் நடத்திய கச்சேரி வரலாற்றுச் சிறப்புமிக்க ஒன்றாக நினைவுகூரப்படுகிறது. பின்னர் உலகெங்கும் வாழும் தமிழர் மத்தியில் அவரது கச்சேரிகள் நடைபெற்றன.
தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவரை அன்புடன் “பாசறைப் பாணர்” என்று அழைத்து கௌரவித்தது, அவரது கலைச் சேவைக்கான உயரிய அங்கீகாரமாகும்.
திரையிசை உலகில் வாய்ப்புகள் இருந்தபோதிலும், தனது வாழ்நாள் முழுவதும் இன உணர்வு, மொழி உணர்வு, தேசிய உணர்வு பாடல்களையே தேர்வு செய்து வாழ்ந்தார் தேனிசை செல்லப்பா.
இன்று அவர் இல்லை. ஆனால் அவரது குரல், பாடல்கள், தமிழரின் வரலாற்று நினைவுகளோடு என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
தேனிசை செல்லப்பா அவர்களின் மறைவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், உலகத் தமிழர் சமூகத்திற்கும் TorontoTamil.com சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.