மெக்சிக்கோவில் விடுமுறை கழித்து கனடாவிற்கு திரும்பிய பல கனடியர்கள், கடுமையான வாந்தி, வயிற்றுவலி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற தீவிர உடல்நலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சிலர் கனடாவிற்கு திரும்பிய பின்னர் நிலைமையின் தீவிரம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.
ஹாமில்டன் நகரிலிருந்து தனது குடும்பத்துடன் மெக்சிக்கோவில் உள்ள ஒரு விடுதிக்கு சுற்றுலா சென்ற கெல்லி பென்னட், தங்களது விடுமுறையின் மூன்றாவது நாளிலிருந்து குடும்பத்தினரிடையே ஒருவருக்குப் பிறகு ஒருவர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக தெரிவித்தார்.
“ஐந்து அல்லது ஆறு பேர் ஒரே நேரத்தில் பாதிக்கப்பட்டோம். பல குடும்பங்கள் தங்களது அறைகளிலேயே முடங்கிக் கிடந்தனர். இது தெளிவாகப் பரவிய ஒரு தொற்றுநோய் போலவே இருந்தது,” என அவர் கூறினார். குறிப்பாக பல குழந்தைகள் படுக்கையிலேயே இருந்து அவதிப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
கனடாவிற்கு திரும்பிய பின் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில், உணவின் மூலம் பரவும் தொற்று மற்றும் மிக வேகமாக பரவும் நோரோவைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இந்த நோரோவைரஸ் பொதுவாக திடீர் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் வைரஸாக அறியப்படுகிறது.
இதனிடையே, மற்றொரு பயணி வாரன் கரியர், தனது தோழி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறினார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் ஈகொலி (Escherichia coli – E. coli) தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம், வெளிநாட்டு விடுமுறை பயணங்களில் உணவு மற்றும் சுகாதார பாதுகாப்பில் அதிக கவனம் தேவை என்பதை மீண்டும் வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.




