கனடாவின் றொரண்டோவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் தம்பதியருக்கு வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்தி அதிக வட்டி கடன்களில் சிக்கவைத்த குற்றச்சாட்டில் $210,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஒன்ராறியோ நிதிச் சேவைகள் ஒழுங்குமுறை ஆணைக்குழு (FSRA), ஹெரால்ட் கெர்ஸ்டெல் மற்றும் அவரது மனைவி எஸ்தர் கெர்ஸ்டெல் ஆகியோருக்கு இந்த அபராதத்தை அறிவித்துள்ளது.
விசாரணையில், குறைந்த கிரெடிட் ஸ்கோர் கொண்டவர்களுக்கும் விரைவில் கடன் பெற்றுத் தருவதாக ஹெரால்ட் தனது நகைக்கடை மற்றும் அடமான நிறுவன விளம்பரங்கள் மூலம் வாடிக்கையாளர்களை ஈர்த்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் அந்த வாடிக்கையாளர்கள், அவரது மனைவியின் உரிமம் இல்லாத நிறுவனத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டு, அங்கு 22 சதவீதம் முதல் 56 சதவீதம் வரை மிக அதிக வட்டி விகிதத்தில் கடன்கள் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த அதிக வட்டி மற்றும் மறைமுகக் கட்டணங்களால் பலர் தங்களது வீடுகளை இழந்ததாகவும், உரிமம் இல்லாத நிறுவனத்தின் மூலம் கடன் வழங்கப்பட்டதால் சட்ட ரீதியான பாதுகாப்பும் கிடைக்கவில்லை என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ஹெரால்ட் கெர்ஸ்டெல், தாம் சட்டத்திற்கு உட்பட்டே செயல்பட்டதாகவும், வங்கிகளில் கடன் பெற முடியாதவர்களுக்கு உதவியே செய்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளார்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.