கனடாவின் ஒன்ராறியோவில் அமைந்துள்ள குழந்தைகளுக்கான பகல் நேரக் காப்பகம் ஒன்றிற்குள் கார் ஒன்று பாய்ந்த சம்பவத்தில் ஒரு குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
நேற்று புதன்கிழமையன்று, மதியம் 3.00 மணியளவில், ஒன்ராறியோ மாகாணத்தின் Richmond Hill நகரில் அமைந்துள்ள குழந்தைகளுக்கான பகல் நேரக் காப்பகம் ஒன்றிற்குள் குறித்த கார் பாய்ந்தது.
இவ் விபத்தில் ஏழு குழந்தைகள் காயமடைந்த நிலையில், அவர்களில் ஒன்றரை வயது சிறுவன் ஒருவன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களுடன் காப்பக ஊழியர்கள் மூன்று பேரும் காயமடைந்துள்ளார்கள். இந்நிலையில் 70 வயதான காரின் சாரதியைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவர் வேண்டுமென்றே காரைக் கொண்டு மோதியதாக தோன்றவில்லை எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ள நிலையில், இது தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




