Reading Time: < 1 minute

சீனா ஜனாதிபதி ஜி ஜின்பிங் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை உண்மையில் விமர்சிக்கவில்லை என அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

Tamil Business Directory

G20 உச்சிமாநாட்டின் நடுவே, ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் ட்ரூடோ நடத்திய கூட்டத்தில் இருந்து தகவல்கள் கசிந்ததாகக் கூறப்பட்ட நிலையில் பிரதமர் ட்ரூடோவை ஜி ஜின்பிங் நேரில் சந்தித்து வினவியிருந்தார்.

அந்த சந்திப்பு காணொளியானது சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், குறித்த விவகாரம் தொடர்பில் விளக்கமளித்துள்ள சீனத்து வெளிவிவகார அமைச்சகம், அது ஒரு வெளிப்படையான கருத்துப்பரிமாற்றம் மட்டுமே என குறிப்பிட்டுள்ளது.

மேலும், இருதரப்பு உறவுகளை மேம்படுத்த கனடா நடவடிக்கை எடுக்கும் என சீனா நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளது. கனடாவில் பரபரப்பை ஏற்படுத்திய அந்த காணொளியானது புதன்கிழமை வெளியானது.

அதில் ஜி ஜின்பிங் குறிப்பிடுகையில், நாம் விவாதித்த அனைத்தும் பத்திரிகைகளில் கசிந்துள்ளது, இது முறையான நடவடிக்கையல்ல என குறிப்பிட்டுள்ளார். மேலும், நாங்கள் இதுபோன்ற செயல்களில் ஒருபோதும் ஈடுபடுவதில்லை எனவும் உள்ளூர் மொழியில் தெரிவித்துள்ளார்.

ஆனால், சீன ஜனாதிபதியுடனான சந்திப்பானது முறைப்படி அமைத்துக் கொள்ளாத ஒன்று எனவும், அதனாலையே இரு நாடுகளும் முறைப்படி அறிக்கை எதுவும் வெளியிடவில்லை எனவும் கனடா அரசாங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.