ஒன்றாரியோ மாகாணத்தின் முற்போக்கு கன்சர்வேடிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான கரோலின் முல்ரோனி, பிரீமியர் டக் ஃபோர்டின் அமைச்சரவையில் இருந்து விலகுவதாகவும், அடுத்த மாதம் தனது பதவியைத் துறக்கவுள்ளதாகவும் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
தற்போது கருவூல வாரியத் தலைவராகவும், பிராங்கோபோன் விவகாரங்கள் அமைச்சராகவும் பணியாற்றி வரும் முல்ரோனி, கடந்த ஞாயிற்றுக்கிழமை இது குறித்து பிரீமியரிடம் தெரிவித்ததாகவும், வரும் ஜூன் 5, வெள்ளிக்கிழமை அன்று அதிகாரப்பூர்வமாக தனது பதவியிலிருந்து விலகவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
கடந்த எட்டு ஆண்டுகளாக யார்க்-சிம்கோ தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும், ஒன்றாரியோ அரசாங்கத்தின் அங்கமாகவும் பணியாற்றியது என் வாழ்வின் மிகப்பெரிய பாக்கியங்களில் ஒன்றாகும்.இந்த முடிவை நான் எளிதாக எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் என் தந்தையை இழந்தேன். கடந்த ஆண்டு, எனது கணவர் ஆண்ட்ரூவும் நானும் எங்களது பிள்ளைகள் வளர்ந்து வீட்டை விட்டுச் சென்ற தனிமையை எதிர்கொண்டோம். வாழ்க்கையில் எது முக்கியம் என்பதை இத்தகைய தருணங்களே நமக்கு உணர்த்துகின்றன.
இவையே, நான் தேர்தல் அரசியலில் இருந்து விலகி, ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதற்கான சரியான நேரம் இது என்ற முடிவுக்கு என்னை இட்டுச் சென்றாகக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் கனடா பிரதமர் பிரையன் முல்ரோனியின் மகளான கரோலின் முல்ரோனி, முதன்முதலில் 2018 ஆம் ஆண்டு யார்க்-சிம்கோ தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதற்கு முன்பு அவர் மாகாணத்தின் தலைமை வழக்கறிஞராகவும் மற்றும் போக்குவரத்து அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.