இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீடுகள் குறித்து கலந்துரையாடுவதற்காக, இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய வர்த்தக தூதுக்குழு இந்த வாரம் கனடாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்கிறது.
இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையிலான இந்த தூதுக்குழுவில், சுரங்கம், எரிசக்தி, வாகன உற்பத்தி மற்றும் விண்வெளித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மூத்த வணிகப் பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர்.
திங்கட்கிழமை முதல் புதன்கிழமை வரை இந்த முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளன. கனடாவின் சர்வதேச வர்த்தக அமைச்சர் மனிந்தர் சித்துவைக் கோயல் சந்தித்து, இரு நாடுகளுக்கும் இடையிலான ‘விரிவான பொருளாதார மற்றும் கூட்டு ஒப்பந்தம்’ (CEPA) தொடர்பான பேச்சுவார்த்தைகளைத் தொடரவுள்ளார்.
இந்த வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்த இரு நாடுகளும் உறுதியளித்துள்ளதாக இந்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவும் இந்தியாவும் வலுவான பொருளாதார பங்காளிகளாகும். வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் இருதரப்பு வர்த்தகத்தை 70 பில்லியன் டாலர்களாக (இரண்டு மடங்கு) உயர்த்துவதே எங்களின் முதன்மை இலக்காகும்.” என கனடா சர்வதேச வர்த்தக அமைப்பின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள மாட்டார் என்று அமைச்சர் மனிந்தர் சித்து ஏற்கனவே உறுதிப்படுத்தியிருந்தார்.
அமைச்சர் பியூஷ் கோயல், கனடாவின் பிரதமர் மார்க் கார்னி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் ஆகியோரையும், முன்னணி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் , ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் ஓய்வூதிய நிதி மேலாளர்களையும் சந்தித்துப் பேசவுள்ளார்.
முன்னதாக, கடந்த மார்ச் மாதம் கார்னி மும்பை மற்றும் புதுடெல்லிக்கு விஜயம் செய்திருந்தபோது, இரு நாடுகளுக்கும் இடையே ‘மூலோபாய எரிசக்தி கூட்டாண்மை’ உட்பட தொடர்ச்சியான பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.





Comments are closed, but trackbacks and pingbacks are open.