Reading Time: 2 minutes

கனடாவின் அல்பேட்டா மாகாணம், கனடாவில் தொடர்ந்து நீடிக்க வேண்டுமா என்பது தொடர்பில் பொதுவாக்கெடுப்பு ஒன்றை நடத்தவுள்ளதாக மாகாண முதல்வர் டானியல் சிமித் அறிவித்துள்ளார்.

Tamil Business Directory

இந்த பொதுவாக்கெடுப்பு 2026 அக்டோபர் 19ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால், இந்த வாக்கெடுப்பு அல்பேட்டா உடனடியாக கனடாவிலிருந்து பிரிய வேண்டுமா என்ற நேரடி “ஆம்” அல்லது “இல்லை” வாக்கெடுப்பாக இருக்காது. அதற்கு பதிலாக, அல்பேட்டா கனடாவில் நீடிக்க வேண்டுமா, அல்லது கனடாவிலிருந்து பிரிவது தொடர்பான சட்டப்பூர்வ செயல்முறையைத் தொடங்க வேண்டுமா என்பது குறித்து மக்களின் கருத்தை அறியும் வகையில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பல மாதங்களாக அல்பேட்டா பிரிவினையை ஆதரிக்கும் குழுக்கள் மற்றும் முதல்வர் டானியல் சிமித்தின் சொந்தக் கட்சிக்குள் உள்ள சில உறுப்பினர்கள், மாகாணம் தழுவிய வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என அழுத்தம் கொடுத்து வந்தனர். இந்த நிலையில், சிமித்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அல்பேட்டா பிரிவினை குறித்த குடிமக்கள் முன்னெடுத்த மனு ஒன்றை, அரசியலமைப்புக்கு முரணானது என நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்திருந்தது. குறிப்பாக, First Nations மக்களின் ஒப்பந்த உரிமைகள் பாதிக்கப்படக்கூடும் என்பதால், சுதந்திர வாக்கெடுப்புக்கு முன்னர் அவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட வேண்டும் என நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.

இந்த தீர்ப்பை விமர்சித்த டானியல் சிமித், “ஒரு நீதிபதியின் சட்டப் பிழை, இலட்சக்கணக்கான அல்பேட்டா மக்களின் குரலை மௌனமாக்க அனுமதிக்க முடியாது” என தனது தொலைக்காட்சி உரையில் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

சிமித் முன்வைத்துள்ள கேள்வி, அல்பேட்டா கனடாவில் மாகாணமாகவே தொடர வேண்டுமா அல்லது கனடாவிலிருந்து பிரிவது தொடர்பான சட்டப்பூர்வ செயல்முறையை அரசு தொடங்க வேண்டுமா என்பதாக இருக்கும். இந்த வாக்கெடுப்பு முடிவு உடனடி பிரிவினைக்கு வழிவகுக்காது. ஆனால், அல்பேட்டா மக்கள் கனடாவில் நீடிப்பதை நிராகரித்தால், பின்னர் சட்டரீதியான பிரிவினை வாக்கெடுப்பை நடத்துவதற்கான நடவடிக்கைகள் வேகப்படுத்தப்படும் என சிமித் தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில், டானியல் சிமித் தாம் தனிப்பட்ட முறையில் அல்பேட்டா கனடாவில் தொடர்வதையே ஆதரிப்பதாகவும் கூறியுள்ளார். மத்திய அரசின் கொள்கைகள், குறிப்பாக எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான விதிமுறைகள், அல்பேட்டா மக்களிடையே நீண்டகால அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான மத்திய அரசுடன் அண்மையில் எரிசக்தி தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், அல்பேட்டா கனடாவுக்குள் செழித்து வளர முடியும் என்ற நம்பிக்கையையும் சிமித் வெளிப்படுத்தியுள்ளார்.

மத்திய கொன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பியரே பொலீவியர், அல்பேட்டா கனடாவிலேயே தொடர வேண்டும் என்பதற்காக தனது கட்சி பிரச்சாரம் செய்யும் என தெரிவித்துள்ளார். “ஒருங்கிணைந்த கனடாவுக்குள் வலுவான அல்பேட்டாவையே நான் விரும்புகிறேன்” என அவர் கூறியுள்ளார்.

பிரிட்டிஷ் கொலம்பியா முதல்வர் டேவிட் ஈபி, அல்பேட்டா பிரிவினை விவாதம் மேற்கத்திய மாகாண முதல்வர்கள் கூட்டத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், கனடா குறித்த டானியல் சிமித்தின் அணுகுமுறையை தாம் ஏற்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அல்பேட்டா பிரிவினை தொடர்பான ஆதரவு தற்போது குறைந்த அளவிலேயே இருப்பதாக சில கருத்துக்கணிப்புகள் சுட்டிக்காட்டினாலும், அக்டோபர் மாத வாக்கெடுப்பு கனடாவின் தேசிய ஒற்றுமை விவாதத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.