கனடாவின் Ontario மாகாணத்தில் உள்ள தொலைதூர தனித்தீவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் கடுமையாக காயமடைந்துள்ளார்.
படகுகள் மூலமாக மட்டுமே சென்றடையக்கூடிய ஏரித் தீவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக Ontario Provincial Police தெரிவித்துள்ளது.
ஒன்டாரியோவின் Greater Sudbury பகுதியில் இருந்து தென்மேற்கே அமைந்துள்ள Little Cabotin Lake தீவிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் 12.30 மணியளவில் தீ விபத்து குறித்து பொலிஸாருக்கு அவசர தகவல் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த பகுதி மிகவும் ஒதுக்குப்புறமான இடமாக இருந்ததால், அங்கு சாதாரண வாகனங்கள் மூலம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து ஹெலிகாப்டர் உதவியுடன் விசேட மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்குச் சென்றனர். பொலிஸ் வான்வழி சேவை பிரிவு, வடகிழக்கு அவசர மீட்புக் குழு மற்றும் கூட்டு மீட்பு ஒருங்கிணைப்பு மையம் ஆகியவை இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டன.
இந்த தீ விபத்தில் சிக்கிய Sudbury பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் 27 வயதுடைய மற்றொரு இளைஞர் கடுமையான தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது உயிராபத்தான நிலையிலிருந்து மீண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து Ontario Fire Marshal அதிகாரிகளின் உதவியுடன் மாகாண பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.